ஆளுநரை பதவி நீக்கம் செய்க : கே.பாலகிருஷ்ணன்

Published On:

| By christopher

“கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக போலீசார் மற்றும் அரசு குறித்து பொறுப்பற்ற முறையில் நேற்று (அக்டோபர் 2) அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி!

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை, குற்றத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்ததுடன், 75 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றியது. இவ்வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என்ற நோக்கில் என்ஐஏ விசாரணைக்கு ஒப்படைக்கப்படுள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் விதமாக வெளிப்படையான முயற்சிகளை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.

காவல்துறை விசாரணைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கத்திலிருந்தே ஊடகங்களில் பேசி வந்தார். காவல்துறையின் உளவு பிரிவில் உள்ளோரை மத அடிப்படையில் பிரித்து, குதர்க்கமாக குறுகிய அரசியல் நோக்கத்துடனான அவரின் பேச்சுக்கள் எல்லை மீறின.

governor rn ravi should resigned - CPIM

பல்ட்டி அடித்தது பாஜக

இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில், பந்த் போராட்டம் நடத்துவோம் என்றும் பாஜக அறிவித்தது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பந்த் நடத்துவதற்கு ஆதரவாக ஊடகங்களில் பேசினார்.

ஆனால், பாஜகவின் பந்த் அறிவிப்பிற்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே, தாங்கள் பந்த் அறிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்டி அடித்தது பாஜக.

கற்பனை சரடுகளை விட்ட ஆளுநர்!

இப்போது, அடுத்தகட்ட சதிராட்டமாக, ஆளுநர் ரவியை களமிறக்கிவிட்டுள்ளார்கள். கோவையில், பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காவல்துறையின் துரிதமான செயல்பாட்டை பாராட்டிவிட்டு, என்.ஐ.ஏ விசாரணை தாமதப்படுத்தப்பட்டதென்றும் அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளதெனவும் கற்பனை சரடுகளை விட்டுள்ளார். மாநில அரசாங்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.

governor rn ravi should resigned - CPIM

ஒன்றிய அரசாங்கம் தான் முதல் குற்றவாளி?

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வரம்பில் உள்ளவர்களே. எனவே, முன்கூட்டியே இப்படியொரு அசம்பாவிதத்தை கணித்து தடுக்க தவறியது என்.ஐ.ஏ தான்.

ஒருவேளை காவல்துறையோடு இணைந்து தானும் விசாரணையை நடத்த வேண்டும் என என்.ஐ.ஏ விரும்பினால் அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு உள்ளது. உண்மை இப்படியிருக்க ஆளுநர் விமர்சிப்பதாக இருந்தால் என்.ஐ.ஏ மீதுதான் தன் விமர்சனத்தை திருப்பியிருக்க வேண்டும்.

ஆளுநர் கதைவிட்டது போல வழக்கின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதில் ஒன்றிய அரசாங்கம் தான் குற்றவாளியாக இருக்க முடியும்.

governor rn ravi should resigned - CPIM

ஆர்.என்.ரவியை பதவிநீக்கம் செய்க!

இந்திய அரசாங்கம் என்பதே மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சிதான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் ஒன்றிய – மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே அரசமைப்பு உள்ளது.

அரசமைப்பினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் ஒற்றை ஆட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியவை. அதற்கு உடந்தையாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்துகிறோம்.

governor rn ravi should resigned - CPIM

கோவை மக்களின் பாதுகாப்பையும், சமூக அமைதியையும் நிலைநாட்டுவதே தற்போதைய தலையாய கடமையாகும். தீவிரவாத, பிளவுவாத சக்திகளை முறியடித்திட வேண்டும். கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றம் இழைத்தோரை தண்டிக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டி20 வரலாறு: மிகவும் குறைந்த ஸ்கோர்களை பதிவு செய்த அணிகள்!

கொடநாடு கொலை வழக்கு: புதிய தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share