தமிழக அரசு அரசாணை 293-ஐ அமல்படுத்தவும், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரையில் அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் இன்று (மே 12) செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில்,
“தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் 2017-ல் இருந்து ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்காகப் போராடி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
2021 ஜூன் 18 ல் முதல்வர் அரசு மருத்துவர்களுக்காக அரசாணை 293 ஐ வழங்கினார். அரசாணையால் தங்களுக்கு பயன் இல்லை என சில மருத்துவர்கள் எதிர்த்தார்கள். அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அரசாணை 293-ஐ மட்டுமே செயல்படுத்த முடியும் என தெரிவித்தார்,
விருப்பத்தின் பேரில் அரசாணை 293-ஐ அமல்படுத்தலாம் என அமைச்சர் கூறினார். ஆனால் தற்போது வரை அரசாணை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே தமிழக முதல்வர் தலையிட்டு அரசாணை 293-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் 2,600 பேராசிரியர்களில் 1,000 பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படவில்லை.
மேலும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 450 பேராசிரியர்கள், 550 இணைப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29 முதல் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதுவரை நோயாளிகள் பாதிக்காத வண்ணம் போராட்டங்கள் நடத்தி உள்ளோம். தற்போது தமிழக அரசு நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகும் படி போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளி உள்ளது.
உயிரை காக்கும் அவசர சிகிச்சை பணிகளை தொடர்ந்து செய்வோம். ஆனால் உச்சநீதிமன்றமே மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது” என கூறினார்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ரிசல்ட்: தேர்ச்சி விகிதம் குறைவு!
பாஜகவும் காங்கிரஸும் எங்கள் நண்பர்கள்: முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு