சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 13) காலை மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவரை குத்திவிட்டு அவரது அறையில் இருந்து விறுவிறுவென நடந்து சென்ற விக்னேஷை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் விக்னேஷ் நிலைகுலைந்தார்.
உடனடியாக அங்கு வந்த கிண்டி காவல்துறையினர், விக்னேஷை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல்நிலையத்தில், நிலைகுலைந்த நிலையில் இருந்த விக்னேஷ், “சார் ஆஸ்பத்திரியில தான் என்னை போட்டு ரொம்ப அடிச்சிட்டாங்க… நீங்களும் என் மேல கை வச்சிராதீங்க சார். எனக்கு ஆல்ரெடி ஹார்ட் பிராப்ளம் இருக்குது” என்று அழுதுகொண்டே போலீசாரிடம் கதறியுள்ளார். விக்னேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில்…
“சரி… டாக்டர் பாலாஜியை ஏன் கொலை செய்ய முயற்சி பண்ணீங்க?
எங்க அம்மாவுக்கு அவரு சரியான சிகிச்சை கொடுக்கல சார். அதனால தனியார் ஹாஸ்பிட்டல்ல மருத்துவம் பார்க்க பணம் கேட்டேன். அவரு பணம் கொடுக்காததால, ஆத்திரத்துல கத்தியை எடுத்து குத்திட்டேன்.
டாக்டரை கொலை முயற்சி பண்ணது உங்க வீட்டுக்கு தெரியுமா?
தெரியாது சார். வீட்ல யாருக்கிட்டயும் சொல்லாம தான் கத்தியை எடுத்துக்கிட்டு வந்து டாக்டரை குத்துனேன்.
சம்பவம் நடந்த அன்னைக்கு சரக்கு அடிச்சிருந்தீங்களா?
இல்லை சார். எப்போதாவது தான் சரக்கு அடிப்பேன். அப்படி அடிச்சாலும் ஒரு கட்டிங் மட்டும் தான், அதுக்கு மேல தாண்ட மாட்டேன்” என்று விசாரணையில் கூறியுள்ளார் விக்னேஷ்.
இதனையடுத்து நேற்று இரவு சைதாப்பேட்டை பெருநகர 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பிரமணியன் முன்பாக விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து, விக்னேஷை புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் விக்னேஷ் எப்படி இருக்கிறார் என்று சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், “முக்கியமான சென்சிட்டிவ் வழக்குகளில் ஜெயிலுக்கு வர்ற கைதிகளுக்கு இங்க ஏற்கனவே உள்ள கைதிகள் டார்ச்சர் கொடுப்பாங்க. விக்னேஷுக்கும் அப்படி ஏதாவது நடந்துருமோன்னு கொஞ்சம் பயத்தோட தான் அவரை விசாரணைக் கைதிகள் சிறையில வச்சிருந்தோம்.
ஆனா, வழக்கத்துக்கு மாறா விக்னேஷை யாரும் டார்ச்சர் பண்ணல. அவரை பாராட்டி சிறைக் கைதிகள் ஆதரவு கொடுக்குறாங்க” என்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆதவ் அர்ஜூனா வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய உதயநிதி
மகளிர் உரிமை தொகை… உதயநிதி சொன்ன குட் நியூஸ்!