மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இன்று (மே 4) கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் ஆட்டோ ஒன்று சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.
மாமல்லபுரம் அடுத்துள்ள மணமை என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்திசையில் வந்த ஆட்டோவும், பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தின் ஒருபக்கவாட்டில் சேதமடைந்தது. ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதால் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாமல்லபுரம் போலீசார் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இரண்டு வாகனங்களும், அதிவேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 6 பேருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதில், “விபத்தில் உயிரிழந்த சென்னை வ.உ.சி.நகரைச் சேர்ந்த காமாட்சி (80), கோவிந்தன்(60), அமுலு (50), சுகன்யா (28) குழந்தைகள் ஹரிபிரியா (8), கனிஷ்கா(6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
அதிமுக அலுவலக பொருட்கள், ஆவணங்கள்: ஒப்படைக்க உத்தரவு!
’ரொனோல்டோ மாதிரி தப்பு செய்யாதே’: மெஸ்ஸியை எச்சரித்த ரிவால்டோ