சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

சவுக்கு சங்கரை 2ஆவது முறையாக தமிழக போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய யூடியூபர்  சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா , உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சூழலில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா தனது மகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஷ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் தரப்பில் பாலாஜி ஸ்ரீநிவாசன், கே.கவுதம் குமார் மற்றும் ஹர்ஷா திரிபாதி ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

“சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த மூன்று நாட்களில் மீண்டும் குண்டர் சட்டம் போட்டுள்ளனர். எவ்வித காரணங்களும் இன்றி அவர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அவரை போதைப்பொருள் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளனர். புலனாய்வு செய்தியாளரான அவர் ஆளுங்கட்சியின் ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார்.

எனவே அவர் வெளியே வரக்கூடாது என்று நினைத்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க வழக்கறிஞர்களை கூட அனுமதிப்பதில்லை” என்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், “நீதிமன்றம் நிவாரணம் கொடுக்கிறது. ஆனால் மீண்டும் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள். இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மேகா ஆகாஷுக்கு டும் டும் டும்… மாப்பிள்ளை யாரு தெரியுமா?

ஜாபர் சேட் வழக்கில் திடீர் திருப்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share