சில நாட்களுக்கு முன் மாலை வேளை… தமிழ்நாடு அரசு பேருந்து தடம் எண் 323 A, புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது பேருந்தை, ஓட்டுனர் முருகன் ரிவேர்ஸ் எடுக்க, நடத்துனர் பேருந்து கடைசி சீட்டிலிருந்து பின் பக்கத்தில் ஏதும் இடிக்காமல் பார்த்துக்கொள்ள விசில் அடித்துக் கொண்டே இருந்தார்.
அப்போது அவரது கண்ணில், பஸ் சீட் கீழே ஏதோ சிறிய பேக் கிடப்பது தெரிந்தது. எடுத்து பிரித்து பார்த்தார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்று அந்த நடத்துநர் சத்தியசீலன் நம்மிடம் சொல்கிறார்.
“பேருந்தில் கிடந்த பேக்கை எடுத்து பிரித்துப் பார்த்தேன்.
உள்ளே இராணிப்பேட்டையைச் சேர்ந்த சேவியர் ஜோசப் பிரெட்ரிக் என்பவருடைய கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் சில ஆவணங்கள் சில புகைப்படங்கள் இருந்தன.
உடனே அதில் உள்ள கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். ‘உங்க பேர் என்ன, நீங்க ஏதாவது பேக் தவறவிட்டீங்களா? அதில் என்ன இருக்கு? எங்க தவற விட்டீங்க?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘பணமெல்லாம் அதிகம் வைக்கல. அதில் உள்ள டாக்குமென்ட்கள்தான் முக்கியம். ஒரு வாரத்துக்கு முன்னாடி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தேன்.
அப்போது யாரோ எடுத்துட்டாங்க. நானும் ஜிப்மர் மத்த இடங்கள்ல தேடிப் பாத்துட்டு ஊருக்கு வந்துட்டேன். ஒரு வாரமா தேடிக்கிட்டே இருக்கேன்’ என்றார்.
அதற்கு நான் அவரிடம், ‘நான் அரசு பஸ் கண்டக்ட்ரா இருக்கேன். என் பஸ்ஸிலதான் உங்க பேக் கிடந்தது. உங்க பேக்கில் பணம் தவிர நீங்கள் சொல்லும் மற்ற அனைத்து டாக்மென்ட்களும் உள்ளது, உங்கள் வீட்டு முகவரி சொல்லுங்க… அனுப்பி வைக்கிறேன்’ என்றதும் முகவரி கொடுத்தார்.
பஸ் கும்பகோணம் சென்றதும் அங்கிருந்து எஸ்டி கொரியர் சர்வீஸில் அவருக்கு அனுப்பி வைத்தேன்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அந்த பேக்-கை பெற்றுக்கொண்ட ஜோசப்க்கு அவ்வளவு சந்தோஷம். பலமுறை என்னைத் தொடர்புகொண்டு நன்றி சொன்னார்.
நல்லவேளை அந்த திருடன் பேக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு பேக்கை வெளியே விட்டெறியாமல் என் பஸ்ஸுக்குள் போட்டான்.
நானும் படித்து வேலை தேடிக்கொண்டு இருந்தபோது 20 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற சான்றுகள் அடங்கிய பைலை பேருந்தில் தொலைத்து விட்டேன்.
அப்போது யாரோ ஒரு புண்ணியவான் என் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தார். அப்போதெல்லாம் செல்போன் வசதிகள் இல்லை.
அன்று எனக்கு ஒருவர் நல்லது செய்தார். இன்று நான் ஒருவருக்கு நல்லது செய்திருக்கேன் என்ற சந்தோஷம் எனக்கு” என்று நெகிழ்ந்தார் நடத்துனர் சத்திய சீலன்.
நாம் ஒருவருக்கு நன்மை செய்வது என்பது அவர் இன்னொருவருக்கு நன்மை செய்ய தூண்டும், ஒரு பாசிட்டிவ் சங்கிலியை வளர்த்தெடுக்கும் என்பதற்கு இதேபோன்ற சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன.
–வணங்காமுடி
18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கோடை மழை
ரஜினியை விமர்சித்த ரோஜா… கொந்தளித்த சந்திரபாபு நாயுடு
2026ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பேட்டி!
