சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூகுள் பிக்சல் நிறுவனம் இணைய உள்ளதாக இன்று (மே 23) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்தது.
இந்த இலக்கை அடையும் வகையில் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபு நாடுகள், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும், முதலீட்டாளர்கள் மாநாடு மூலமும் 9 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு, ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் சென்று தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இதன் விளைவாக, கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கூகுள் பிக்சல் நிறுவனம் தொடங்கும் பட்சத்தில், தொழில்நுட்பத் துறையில் உயர்கல்விப் பெற்ற இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்வரை ஒருமையில் பேசலாமா? – சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
மோடியை தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்: டிஜிபியிடம் செல்வப்பெருந்தகை புகார்!