தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசின் நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தமிழ்நாடு வேளாண் முதன்மை பொறியாளரும் இந்த விருதைப் பெற இருக்கின்றனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதுகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுத்துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகளின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
அதன்படி, செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்டு,வாழ்க்கை தரத்தை உயர்த்தியதாக திருவள்ளூர் ஆட்சியருக்கும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொண்ட திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று திருநெல்வேலியில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்ததற்காக அம்மாவட்ட ஆட்சியரும் நல் ஆளுமை விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.
அரசுத்துறையில் விருது
இதேபோன்று திருநங்கைகளின் வாழ்க்கை மாற்றத்திற்காக முன்முயற்சி எடுத்த செங்கல்பட்டு சமூகநல அலுவலர், வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கும்,
சென்னையில் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை காவல் ஆணையாளருக்கும் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவர்களுக்கு விருதுடன் பரிசுத்தொகையாக ரூ. 2 லட்சம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா