நாமக்கல்லில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூபாய் 6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 23) பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் போலீஸாருடன் இணைந்து 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனி நபர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் அவர்களிடம் அதற்கான ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்வார்கள்.
அதன்படி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மல்லூர் பகுதியில் இன்று காலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த வேனில் ரூ.6.2 கோடி மதிப்புள்ள 29 கிலோ வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் முழுவதும் தனியார் நகை கடைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர். எனினும் கொண்டு செல்லப்பட்ட நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப்பதிவு
நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்
GOLD RATE: கொஞ்சமாக விலை குறைந்தது தங்கம்