ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கப் பட்டயம் கண்டுபிடிப்பு!

தமிழகம்

ஆதிச்சநல்லூரில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது தங்கத்திலான நெற்றிப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில், கடந்த 8 மாதங்களாக அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு இதுவரை, 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பானைகள், மனித எலும்புக்கூடுகள், சுடுமண் உருவங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இரும்புக் கருவிகளும் செப்பு பட்டயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. சமீபத்தில், ஆதிச்சநல்லூரில் ‘சி சைட்’ எனப்படும் பகுதியில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வின்போது பழங்கால தங்க காதணி ஒன்று கிடைத்தது.

தங்கப் பட்டயம் கண்டுபிடிப்பு!

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது தங்கத்திலான நெற்றிப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்துடன், 2 அலங்கார கிண்ணங்களும், வெண்கலத்தால் செய்யப்பட்ட வடிகட்டி ஒன்றும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக, ஆய்வு நடைபெற்று வருகிறது.

அகழாய்வில் தங்கம் கிடைத்ததற்கு மத்திய தொல்லியல் துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், “இது, அலெக்சாண்டர் ரியா தனது 1902 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் விவரித்த அனைத்து குணாதிசயங்களுடன் சரியாக பொருந்தும் வகையில் உள்ளது. இது, சமீபத்திய அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பணக்கார கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருக்கலாம். தங்க கிரீடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

இந்த ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே பத்திரப்படுத்தி வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவரும் நிலையில், தங்கப் பட்டயம் கிடைத்திருப்பது அந்தப் பகுதி மக்களை மேலும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதுபோல், எண்ணற்ற தங்கப் பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

திருமண மோசடியில் ஈடுபட்ட துணை நடிகை மாயம்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *