கோகுல்ராஜ் கொலை: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு!

தமிழகம்

ஆணவ கொலை செய்யப்பட்ட நாமக்கல் கோகுல்ராஜ் வழக்கில் அவர் கடைசியாக சென்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இன்று (ஜனவரி 12) நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ்சாட்சியாக மாறினார்.

இந்த வழக்கு விசாரணையின் போது சுவாதியிடம் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.  இதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி 6ஆம் தேதி நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது சுவாதி தரப்பில் ஆஜரான அவரது கணவர், சுவாதி கர்ப்பமாக இருப்பதால் அவரால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சுவாதி நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவது உறுதியாகிறது என தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

அதுபோன்று கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சிசிடிவியில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும், ஜனவரி 22 ஆம் தேதி நேரடியாக செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி இன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு புற வாயில்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர்.

Gokulraj murder Judges inspect Ardhanareeswarar temple

கோயில் கொடிமரம் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் பார்வையிட்டனர்.

சிசிடிவி கேமராக்கள் முறையாக ஆய்வு செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீதிபதிகள் வருகையை ஒட்டி கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பிரியா

உலகளவில் கவனம் பெற்ற ராம்சரண் ஆடை!

ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0