“மனசாட்சிப்படி உண்மையை சொல்லுங்கள்”- சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி!

தமிழகம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், மனசாட்சிப்படி உண்மையை சொல்லுங்கள் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து  தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதே போல, 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று(நவம்பர் 24) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிறழ்சாட்சியாக மாறிய கோகுல்ராஜின் தோழி சுவாதியை  காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் முன் சாட்சியளிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

நீதிமன்ற வளாகத்திலேயே விசாரணை நடந்து வருகிறது. சாட்சி கூண்டில் சுவாதி நிறுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு அருகில் சிசிடிவி காட்சிகளை திரையிடும் டிவி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது 2015 ஆம் ஆண்டு சுவாதியும், கோகுல்ராஜூம் கோயிலில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சிகள் திரையிடப்பட்டன.

Gokulraj murder case Judges barrage of questions to Swathi

அந்த காட்சியைப் பார்த்த உடன் சுவாதி கண்ணீர்விட்டு கதறி அழுதார். ஆனால் சுவாதி, இந்த சிசிடிவியில் தெரிவது நான் இல்லை என்று அழுதபடி பதிலளித்தார்.

அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள்.

இந்தக் காட்சியில் இருப்பது நீங்கள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள்.

உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா. நீங்கள் உண்மையை சொன்னால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் குறுக்கு விசாரணை செய்யவேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

ஒருகட்டத்தில் அந்த காட்சியில் இருப்பது கோகுல்ராஜ் தான் என ஒத்துக்கொண்ட சுவாதி, அவரது பின்னணி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

கலை.ரா

பெண்ணிடம் பண்பற்ற முறையில் கேள்வி: மன்னிப்பு கேட்ட நீதிபதி!

திருமண வரவேற்பில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.