வாரத்தில் மூன்று நாட்கள் அதிகாரிகள் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். go and meet farmers in field
தமிழக வேளாண் துறை செயலராக இருந்த அபூர்வா கடந்த ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்றார். தொடர்ந்து அத்துறையின் வேளாண் துறை உற்பத்தி ஆணையர் மற்றும் புதிய செயலாளராக தட்சிணாமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.
அவர் பதவியேற்றது முதல் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக இதுவரை வேளாண் துறை அதிகாரிகள் வாரத்தில் நான்கு நாட்கள் ‘வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்’ நடத்தி வந்தனர். இதனால் அதிகாரிகளை விவசாயிகள் தொடர்பு கொள்ள முடியாதது, உடனுக்குடன் மானியம் பெற முடியாதது, குறைந்த பயிர் சாகுபடி என பல பிரச்சனைகள் எழுந்தது.

இந்தநிலையில் செயலாளராக பதவியேற்ற தட்சிணாமூர்த்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, வாரத்தில் இனி மூன்று நாட்கள், காலை 9:00 மணிக்குள் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் விவசாயிகளின் வயல்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, பயிர் சாகுபடி ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
அப்போது, இருப்பிடம், தேதி, நேரம், வானிலை, திசைகாட்டி உள்ளிட்ட விபரங்களுடன் கூடியே, ‘ஜியோ டேக்’ முறையில், விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அலுவலர்கள் வயல்வெளி ஆய்வுக்கு செல்வதை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர்கள், தோட்டக்கலை துணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும்” என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.