இந்திய அளவில் நடக்கும் விபத்துக்களில் 20% மேற்பட்ட விபத்துகள், தெரு நாய்கள் மோதலால் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தஞ்சாவூரில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், அவற்றின் கழுத்தில் ஒளிரும் பட்டை அணிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையின் குறுக்கே திடீரென பாய்வதால் வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டதா என கண்டறியவும், அவற்றால் விபத்துகள் நேரிடாமல் தடுக்கவும், நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகள் அணிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், “தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைக் கண்டறிந்து கருத்தடை செய்யும் பணி கடந்தாண்டு தொடங்கியது.
அதன்படி, இதுவரை 3,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்பட்டுள்ளன.
இதனால், சாலையில் திரியும் நாய்கள், கருத்தடை செய்யப்பட்டதா, இல்லையா என கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், அந்த நாய்கள் சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, கருத்தடை செய்யப்படும் நாய்களுக்கு கழுத்தில் ஒளிரும் பட்டை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், நாய்கள் இரவு நேரங்களிலும் சாலையில் திரியும்போது, வாகன ஓட்டிகள் அவற்றை கண்டறிந்து விபத்து நேரிடாமல் தவிர்க்க முடியும். இந்தப் பணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோயம்புத்தூர், சரவணம்பட்டியைச்சேர்ந்த ரவிச்சந்திரனின் நண்பர் ஒருவர் கடந்த ஆண்டு தெரு நாய்களால் விபத்துக்குள்ளாகி இறந்தார்.
நண்பரின் இறப்புக்குப் பின்னர் ரவிச்சந்திரன், இரவு நேரத்தில் தெருவில் அலைகின்ற நாய்களை தெரிந்துகொள்ள, நாய்களின் கழுத்தில் மிளிரும் பட்டைகளை கட்ட ஆரம்பித்தார்.
இதுவரை கோவையின் முக்கிய பகுதிகளான சரவணம்பட்டி, கணபதி, டெக்ஸ்டூல் பாலம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டை அணிவித்திருக்கிறார்.
ரவிச்சந்திரன் மட்டுமின்றி இவருடைய நண்பர்கள், இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும், இந்தப் பணியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் : இந்தியா சாதனை!