கன்னியாகுமரி கடலில் அடுத்த அற்புதம்… இரு பாறைகளை இணைக்கும் கண்ணாடி பாலம்!

Published On:

| By Kumaresan M

கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் மற்றும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள இரு பாறைகளை இணைக்கும் வகையில், கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.

கன்னியாகுமரி சுற்றுலாவுக்கு பெயர் போனது. இந்தியாவின் ஒரு முனையான இங்கு ஏராளமான சுற்றுலாத்தளங்கள் அமைந்துள்ளன. இதைப் பார்ப்பதற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.

இந்த சுற்றுலாத்தளங்களில் முக்கியமானது கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபமும் திருவள்ளுவர் சிலையும். இவை இரண்டும் அருகருகே இருந்தாலும் படகில்தான் இதுவரை செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தற்போது, இந்த இரண்டு பாலங்களையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 77 மீட்டர் நீளத்தில் 10 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு சுமார் ரூ.37 கோடி செலவாகியுள்ளது. இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்வது திரில்லிங்காக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த திரில்லிங்கை அனுபவிப்பதற்காகவே ஏராளமான மக்கள் இங்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி வரும் இன்றும் நாளையும் (டிசம்பர் 29,30) வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதையை முதல்வர் கலைஞரால் அமைக்கப்பட்டது. இந்த சிலையை கலைஞர் 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் சிலையை கணபதி ஸ்தபதி வடிவமைத்திருந்தார்.கன்னியாகுமரியில் சுனாமி தாக்கிய போது கூட சிலை அசைந்து கொடுக்காமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எம்.குமரேசன்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… விஜய் கைப்பட எழுதிய கடிதம்!

போலீசாரை டென்ஷனாக்கிய அதிமுகவின் ‘யார் அந்த சார்?’ போஸ்டர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share