“அண்ணா… காலை பிடித்து கதறிய மாணவி”: அண்ணா பல்கலையில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

அண்ணா பல்கலை வளாகத்திற்குள்ளே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். இதன் கீழ் தமிழ்நாடு முழுவதும் 400க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன.

அண்ணா பல்கலையில் சேர வேண்டும் என்பதற்காகவே 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அதிக கட் ஆஃப் பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பார்கள்.
அப்படி பெருமை வாய்ந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

அண்ணா பல்கலையில் படித்து வந்த ஒரு மாணவியும், மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 23ஆம் தேதி இரவு, அந்த மாணவியும் அவரது காதலரும் அண்ணா பல்கலை வளாகத்தின் பின்புறத்தில் அடர்த்தியான இடத்துக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர்.
இரவு 7 மணிக்கு மேல் இருள் நிறைந்த அந்த இடத்தில் ஆண் நண்பர், தனது காதலிக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு நபர்கள் அங்கே வந்து, காதலர்கள் முத்தம் கொடுத்து நெருக்கமாக இருந்ததை முழுமையாக வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அருகே சென்று, ஆண் நண்பரை அடித்து அங்கிருந்து கிளம்ப சொன்ன போது, அவர் மறுத்திருக்கிறார். அந்த பெண்ணும் “போகாத… எனக்கு பயமா இருக்கு” என்று சொல்ல அங்கு வந்தவர்களில் ஒருவர், சற்று தூரத்துக்கு அந்த காதலனை இழுத்துச் சென்றுள்ளார். அவரை விட்டால் இங்கு நடப்பதை வெளியில் சொல்லிவிடுவார். இங்கேயே நம்மை சுற்றி வளைத்து பிடித்துவிடுவார்கள் என்று தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்.

அந்த சமயத்தில், அந்த மாணவியருகே நின்றிருந்த மற்றொருவர், ’உன் லவ்வரை இழுத்துச் சென்றது பல்கலை ஸ்டாஃப் தான். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் இதையெல்லாம் உங்கள் பெற்றோர், ஹெச்ஓடி, டீன் ஆகியோரிடம் தெரியப்படுத்திவிடுவேன். அதனால் வெளியில் சொல்லாமல் இருக்க நான் சொல்வதை கேள்.

இல்லையென்றால் உன் வாழ்க்கையே போய்விடும். வீடியோவை இணையத்தில் அப்லோடு செய்துவிடுவேன் என்றுகூறி தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியிருக்கிறார்.

அந்த பெண், அண்ணா என்னை ஒன்றும் செய்யாதீங்க… நீங்கள் கேட்பதை நான் கொடுக்கிறேன் என்று சொல்ல… நான் சொல்வதை செய் என்று முத்தம் கேட்டிருக்கிறார் அந்த நபர்.

அந்த பெண் மறுப்புத் தெரிவித்து பணம், காசு வேண்டுமானாலும் தருகிறேன்…என்னை விட்டுவிடுங்கள்… ப்ளீஸ் என்று காலில் விழுந்து கெஞ்சி கதறியிருக்கிறார். எனினும் அந்த நபர், நான் சொல்வதை கேள் என்று மிரட்ட, அந்த பெண்ணால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இரக்கமில்லாமல் அந்த பெண்ணின் ஆடையை கலைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆடையை களைந்தபோது அதையும் வீடியோ எடுத்திருக்கிறார்.

பின்னர், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது… போலீஸில் கம்பளைண்ட்டும் கொடுக்க கூடாது. அப்படி எதாவது செய்தால் இந்த வீடியோவை இணையத்தில் லீக் செய்துவிடுவேன். பிறகு உன்னால் படிக்கவும் முடியாது, வெளியில் வரமுடியாது. உன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று கூறி அந்த பெண்ணின் ஐடி கார்டு உள்ளிட்டவற்றை போட்டோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

இவருடன் வந்த மற்றொரு நபரும், அந்த பெண்ணின் காதலனிடம் ஐடி கார்டை வாங்கி புகைப்படம் எடுத்திருக்கிறார். பின்னர் அந்த இரண்டு பேரும் அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள்.

கடந்த 23ஆம் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து மறுநாள் அதாவது நேற்று (டிசம்பர் 24) கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்திருக்கிறார்.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். தொடர்ந்து பல்கலையில் பணியாற்றும் அனைத்து செக்யூரிட்டிகளிடமும் விசாரித்து வருகின்றனர்.

இதில் சிலரை போலீஸ் கண்காணிப்பில் வைத்து விசாரித்து வருவதாகவும், செக்யூரிட்டி உதவியுடன் அந்த நபர்கள் உள்ளே சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்னாள் மாணவர்கள் யாரேனும் உள்ளே வந்தார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்று பெண் பாதிக்கப்பட்டது முதன்முறையல்ல… ஏற்கனவே சில பெண்களுக்கு இவ்வாறு நடந்திருக்கிறது என்றும் அவர்களிடம் இருந்து பணம், நகைகளையும் மிரட்டி பறித்து சென்றிருக்கிறார்கள் என்றும் இந்த பெண் தைரியமாக முன்வந்து போலீஸில் புகார் கொடுத்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“மோடியை அடையாளம் கண்டது வாஜ்பாய் தான்” – அண்ணாமலை

வன்னியர் 15% இட ஒதுக்கீடு… திமுக நிறைவேற்றுமா? – சிவசங்கருக்கு ஜி.கே.மணி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share