தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி!

Published On:

| By christopher

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கோ. கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்த தம்பதியர் தீபா (32) – ஆனந்தகுமார் (43). இவர்களுக்கு ஆதனா, அகல்யா ஆகிய 2 பெண் குழந்தைகளும், ஆதிஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் என 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதியினரின் 2வது மகளாகிய 8 வயதுடைய அகல்யாவிற்கு கடந்த ஆண்டு கிட்னி பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக பாண்டிச்சேரி ஜிப்மர், மற்றும் சென்னை அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து கடந்த 30ஆம் தேதியன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வழக்கம்போல நேற்று டயாலிசிஸ் அளித்த பின்னர் மாலை 5 மணியளவில் அகல்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் தாகம் என கூறியதால் சிறுமியின் தாயார் தீபா, படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை கொடுத்துள்ளார்.

உடனடியாக சிறுமி துப்பிய நிலையில் அருகில் இருந்த செவிலியர் அது தண்ணீர் அல்ல; நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் என தெரிவித்துள்ளார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக சிறுமி அகல்யா அவசர வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமலிங்கம்

சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா?’: மிரட்டும் மாமன்னன் டிரெய்லர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel