அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதியை மாற்றக்கோரி கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான தேதியை தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குனரகம் கடந்த ஜூன் 7 அன்று வெளியிட்டது.
மருத்துவத் தறையின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கான பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 ஆம் தேதி வரை சென்னையில் எழும்பூரில் உள்ள சுகாதார மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது .
அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதில் ஜூன் 19 முதல் 21ஆம் தேதி வரை மருத்துவ அதிகாரிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதனிடையே வரும் ஜூன் 23ஆம் தேதி நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பிஜி நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மருத்துவர்கள் சென்னை வந்து கலந்தாய்வில் கலந்து கொண்ட பிறகு உடனடியாக மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காக சொந்த ஊர் அல்லது தேர்வு மையம் அமைந்துள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
இதனால், பிஜி நீட் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்படுவதோடு அலைச்சல் காரணமாக தேர்வு எழுதுவதிலும் சிரமம் ஏற்படும் என்று நீட் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சார்பில் கூறப்படுகிறது.
இதனால் அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதியை மாற்றிவைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : புதுச்சேரி ஜிப்மரில் பணி!
நான் முதல்வன்’ திட்டம் : லண்டன் செல்லும் மாணவர்கள்…. வாழ்த்திய முதல்வர்!