சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆக்கிரமிப்பு… ஆக்‌ஷனில் இறங்கிய ஆணையர்!

Published On:

| By Selvam

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜூன் 14) தடுத்து நிறுத்தினார்.

தலைநகர் சென்னையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடற்கரை மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக சிஎம்டிஏ காத்திருக்கிறது.

ஆனால், அதேவேளையில் பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவில் அருகே, கடற்கரையில் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமான பணிகளுக்காக மண் அள்ளும் இயந்திரங்கள், செங்கற்கள், போர்வெல் இயந்திரங்கள் கடற்கரையில் நிறுவப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தொழிலாளர்கள் தங்கி வேலைபார்ப்பதற்காக அங்கு மூன்று தகர கொட்டைகைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி 179-ஆவது வார்டு கவுன்சிலர் கயல்விழி ஜெயக்குமாரிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் நிருபர் கேட்டபோது, “கடற்கரை பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

அடையாறு மண்டல செயற்பொறியாளர் புருஷோத்தமன், “இது சட்டவிரோத கட்டுமானம். கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த பிறகு அனுமதியின்றி நடைபெறும் கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் அனுப்புவோம்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “கடற்கரையில் சாலைகள் அமைக்க முடியாது. ஆனால், மீன்பிடி குக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக ஒரு வழி பாதையை பயன்படுத்துகிறார்கள்.

பெரிய வாகனங்கள் பாதையில் நுழைவதை தடுக்க தடுப்புகளை அமைக்க உள்ளோம். இதற்காக அடுத்த மாதம் டெண்டர் கோர உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் வசிக்கும் சுரேந்திரன் கூறும்போது, “கடற்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இங்கு வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் தெரிவித்து வருகிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சுத்தம் செய்வார்கள். ஆனால், லாரிகளில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படும்.

கடற்கரையில் இருந்த இயற்கையான வெள்ள வடிகாலையும் குப்பைகளை நிரப்பி மூடிவிட்டனர். இது முழுவதுமாக மூடப்பட்டால், கலாஷேத்ரா காலனி வெள்ளத்தில் மூழ்கும்” என்று கவலையோடு தெரிவித்தார்.

கடற்கரையில் கட்டுமான பணிகள் நடந்தால் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்த கடலோர அமைப்பு ஆராய்ச்சியாளர் ராமசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “நன்னீர் உப்பாக மாறும், ஆமைகள் தங்கள் கூடு கட்டும் இடங்களை இழக்கும், மணல் அரிப்பு ஏற்படும் மற்றும் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும். இவை அனைத்தும் உடனடியாக ஏற்படும் பாதிப்புகளாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை இன்று ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், பணிகளை தடுத்தி நிறுத்தினார். மேலும், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழிசை வீடு தேடிச் சென்ற அண்ணாமலை

சென்னையில் மழை எப்போது? வானிலை மையம் சூப்பர் அப்டேட்!