முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. GCC clarifies cm breakfast scheme not tender
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நவம்பர் 29 ஆம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் காலை உணவு வழங்குவதை தனியார் நிறுவனங்கள் மூலம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதுகுறித்து நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த, சென்னை மாநகராட்சி 98-வது வார்டு கவுன்சிலர் பிரியதர்ஷினி, “தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை உணவு திட்டம் 98-வது வார்டில் தாகூர் மாநகராட்சி பள்ளியில் உணவு தயாரிக்கப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனி காண்ட்ரக்டரிடம் ஒப்படைத்து உணவு தயாரித்து மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஏற்க கூடியதாக இல்லை. எந்த ஒரு வேலையும் ஒப்பந்தத்திற்கு விடக்கூடாது என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
மாநகராட்சி பணிகளில் அனைத்தும் ஒப்பந்த பணியாக தான் உள்ளது. இந்த முறைக்கு மாமன்ற கூட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு கோரப்படவில்லை என்று மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“பெருநகர சென்னை மாநகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முன்னோடி திட்டமாக 37 பள்ளிகளில் மாநகராட்சியின் சார்பில் காலை உணவு தயாரித்து தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின்படி,
இதற்காக அமைக்கப்பட்ட உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து,
தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின்,
அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.
இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்!
உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளை தரைமட்டமாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்!
GCC clarifies cm breakfast scheme not tender