கேஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 மாத கைக்குழந்தை உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை அண்ணாநகர் 3வது குறுக்கு சந்தில் உள்ள ஜெகதீஷ் என்பவரது வீட்டு மாடியில் மாணிக்கம் என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் பானு, பிரியா, பேரக்குழந்தைகள் தீட்ஷிதா, அபினேஷ் மற்றும் 10 மாத கைக்குழந்தையுடன் வாடகைக்குக் குடியிருக்கிறார்.
இன்று (அக்டோபர் 17) காலை 6 மணியளவில் ராஜேஸ்வரி தேநீர் போடுவதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் வீட்டிற்குள் இருந்த 7 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களின் துணையுடன் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 7 பேருக்கும் தீக்காயம் மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்துத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் பயங்கர சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதியில் மக்கள் கூட்டமாகத் திரண்டனர்.
மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மோனிஷா
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தீவு போல் காட்சியளிக்கும் அந்தியூர்: பள்ளிகளுக்கு விடுமுறை!