திருவண்ணாமலையில் பெர்டோ (perto) வகையான ஏடிஎம் மிஷின்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் நடந்த இதே போன்ற ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய ஒரு கும்பல் இதனை அரங்கேற்றி இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையர்கள் ஒரே முறையை பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவங்களை போலீசார் ஆய்வு செய்ததில் நீண்ட காலமாக ஆளில்லா ஏடிஎம்மை கொள்ளையர்கள் நோட்டமிட்டு, அதன்பின்பு ஏடிஎம்களில் அதிக பணம் நிரப்பப்படும் மையங்களை குறி வைக்கின்றனர்.
பணம் நிரப்பும் நிறுவனத்தைச் சார்ந்த நபர்கள் உதவியோடு மட்டும் தான் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது கடந்த வழக்குகளில் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையிலும் யாரும் இல்லா நேரத்தில் உள்ளே புகுந்து சிசிடிவி கேமராக்களை கருப்பு மை கொண்டு காட்சிகளை மறைத்து விடுகின்றனர்.
அதன்பின் கேஸ் கட்டர்களை வைத்து எந்த அளவுக்கு வெட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ஏடிஎம் மிஷின்களை வெட்டி பணத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
அதன் பின்பாக கைரேகை எதுவும் சிக்கக் கூடாது என்பதற்காக தீயிட்டு கொளுத்தி விட்டு செல்கின்றனர்.
கொள்ளையர்கள் அதிகமாக எஸ்பிஐ வங்கிகளிலும்,சில தனியார் வங்கிகளிலும் இந்த கைவரிசையை காட்டி இருப்பது கடந்த கால சம்பவங்களில் தெரிய வந்திருக்கிறது.
அதுவும் குறிப்பாக பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்கள் இருக்கும் மையங்களை மட்டுமே கொள்ளையர்கள் குறி வைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பை ராய்கார்ட் பகுதியில் 56 லட்சமும், அதே மாதம் மேற்கு வங்கம் பட்வான் என்ற இடத்தில் 17.30 லட்சமும்
பிப்ரவரி மாதம் குர்கானில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் 77 லட்ச ரூபாயும், பீகாரில் ஏப்ரல் மாதம் 24 லட்சம் ரூபாயும், பெங்களூரு பரப்பன அக்ரஹார பகுதியில் மே மாதம் 19 புள்ளி 65 லட்சமும்,
ஜூன் மாதம் டெல்லி சத்யா நிக்கேதன் பகுதியில் இருபது லட்சம் ரூபாயும், புனேவில் 5 லட்சம் ரூபாயும் தானே பீவாண்டி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 20 லட்ச ரூபாயும்,
கடந்த நவம்பர் மாதம் குஜராத் காந்திநகர் பகுதியில் எட்டு லட்ச ரூபாயும், இந்தாண்டு ஜனவரி மாதம் லக்னோவில் 20 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்ட மாநில போலீசாரிடம் பெற்றுக்கொண்டு தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் யாராவது திருவண்ணாமலை பகுதியில் நுழைந்து ஏடிஎம்மில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்று கொள்ளையடிக்கும் முறையை வடமாநிலத்தவர்கள் ஒரே இடத்தில் பயிற்சி பெற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலை.ரா