கால்டாக்சியில் சென்று கொண்டிருந்த 40 வயது பெண் மற்றும் பள்ளி முடித்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவி; சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன. சென்னையில் நடந்த இந்த சம்பவங்கள் பெண் பிள்ளைகளின் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பல் வன்கொடுமை
கடந்த சனிக்கிழமை அன்று 40 வயது பெண் ஒருவர் கோவில் திருவிழாவை முடித்துவிட்டு இரவு 11.30 மணியளவில் தனது குடும்ப நண்பர் ஓட்டி வந்த கால்டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தாம்பரம்-மதுரவாயில் புறவழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே ஒரு நபர் காரை நிறுத்தியுள்ளார். அவருடன் இருந்த 5 பேர் டிரைவரை தாக்கியதுடன் உதவி கேட்டு சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி காரை சிறிது தூரம் ஒட்டி சென்று டிரைவரை கீழேதள்ளி விட்டனர்.
அந்த பெண்ணை மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குபுறமான பகுதிக்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த 13 சவரன் நகைகளை பறித்து விட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே காயமடைந்த டிரைவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த காவல் ரோந்து வாகனத்தை நிறுத்தி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
தப்பி ஒடிய இளைஞர்கள்
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். அவர்களை கண்டதும் 6 பேரில் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக சூர்யா பிரகாஷ், கருப்பையா, தினேஷ், சுபாஷ், கணேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி 342, 323, 365, 395, 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வேறு யாரிடமாவது இப்படி நடந்துகொண்டார்களா? எவ்வளவு நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கஞ்சா எடுத்துக் கொண்டு மதுபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்
புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீடு திரும்புவதற்காக நேற்று ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். அந்த இருவரும் மாணவியிடம் பாலியில் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர். மாணவி இது குறித்து ஆட்டோ டிரைவரிடம் தெரிவிக்க முயற்சி செய்தார். ஆனால் அது அவரால் முடியவில்லை.
இதனால் தப்பிக்க முயன்ற மாணவி ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவில் இருந்து சாலையில் குதித்தார். இதையடுத்து மாணவியிடம் தவறாக நடந்த இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பித்து ஓடிவிட்டனர். ஆட்டோ டிரைவர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமைனையில் அனுமதித்து போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், ஆட்டோ பயணித்த வழியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜகன் மற்றும் கோருக்குப்பேட்டையை சேர்ந்த மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் பாடகர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்
சென்னையில் 2014ல் 38ஆக இருந்த போக்சோ வழக்கின் எண்ணிக்கை 400க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
2015ல் 98, 2016ல் 93, 2017ல் 45, 2018ல் 145, 2019ல் 223, 2020ல் 239 , 2021ல் 435 என பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நடந்த இந்த இருவேறு சம்பவங்கள் பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழக தலைநகரில் பெண்களுக்கு இன்னும் முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.
மோனிஷா
வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் தொழில் பயிற்சி!