கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கஞ்சா இளைஞர்கள் 7 பேர் கைது!

Published On:

| By Kalai

சேலையூரில் கஞ்சா வியாபாரி வீட்டில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சேலையூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்த ஏழு பேர், போலீசாரை கண்டவுடன் வாகனங்களை திருப்பிக் கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

இதனை கண்ட போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஹரிபிரசாத் (32), யுவராஜ் (30), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி (34), மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீர்த்திராஜன் (22), கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (30), விழுப்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), பெருங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் (27) என்பது தெரிய வந்தது.

அவர்களை சோதனை செய்தபோது பாரதி என்பவரிடம் ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஒன்றும் இருந்தது.

ஹரிபிரசாத் என்பவரிடம் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் யுவராஜ் என்பவரிடம் ஒரு கத்தி இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவற்றை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் பாரதி என்பவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஹரிபிரசாத் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது தலா 2 கொலை முயற்சி வழக்கும், 2 சண்டை வழக்குகளும், நாகராஜ் என்பவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், 4 சண்டை வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் 17 வயது பெண்ணை கூட்டிச் சென்று பலாத்காரம் செய்து அடைத்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பெண்ணை மீட்ட போலீசார் அவர்கள் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாநிலத்தில் போதைப் பொருட்களை ஒழிக்கவேண்டும் என்று முதல்வர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கஞ்சா என்பது உடல் நலனைக் கெடுக்கும் போதைப் பொருளாக மட்டும் இல்லாமல், சமூகத்தைக் கெடுக்கும் குற்றங்களின் காரணியாகவும் இருக்கிறது.

எனவே கஞ்சாவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

கலை.ரா

அரசு மருத்துவமனையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல், அதிர்ச்சி சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share