சென்னையில் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்க உள்ள நிலையில் எந்தெந்த வழித்தடங்களில் ஊர்வலம் செல்லலாம் என்றும் கரைக்கும் இடங்கள் குறித்தும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட சீனிவாசபுரம் – பட்டினப்பாக்கம், பல்கலை நகர் – நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகரில் நிறுவியுள்ள விநாயகர் சிலைகளை மேற்படி நான்கு இடங்களில் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர்,
எம். ஜி. ஆர் நகர், வடபழனி, சைதாப்பேட்டை வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள்,
மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்கலாம்.
வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர். கே. நகர், கொடுங்கையூர் மற்றும் மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கும்
திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலம் அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ராஜ்
சின்ன பிரச்சினைக்கெல்லாம் எதுக்குங்க கோர்ட், கேஸ்னு… அப்டேட் குமாரு
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை முட்டை பொரியல்