விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதற்கு அனுமதி கேட்டு அலைவதாலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாலும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற ஆலோசனைகள்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாட்களுக்கு முன்பு அவசர உத்தரவுகளும், சில படிவங்களும் அனுப்பப்பட்டு சில வாய்வழி உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
போலீசாரே அனுமதி வாங்க வேண்டும்
முன்பு விநாயகர் சிலைகளை வைக்க விரும்புபவர்கள், பொது இடங்களில் வைப்பதற்கு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தால், அந்த விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது நகரம் மற்றும் மாநகர வார்டு கவுன்சிலர்களிடம் ஒப்புதல் பெற்று மின்சாரம், தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்று, இன்ஸ்பெக்டரிடம் ஒப்புதல் பெற்று, ஆர்.டி.ஓவிடம் அனுமதி பெற்று கொடுத்த பிறகுதான் சிலையை வைக்க வேண்டும்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இது போலீசாரின் பணியாக மாறியிருக்கிறது. மேலும், விநாயகர் சிலைகளை வைக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்த தமிழக காவல் துறையினர் செப்டம்பர் 5ம் தேதி வரை அச்சிலைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்டு அலைவதாலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாலும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில் சிரமம்
இதுகுறித்து அவர்கள், “பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் தரப்பில் ஆர்.டி.ஓ. அலுவலர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அவர்களோ, ‘அனுமதி கேட்டு சாதாரண கான்ஸ்டபிள்கள் வரக்கூடாது; காவல் துறையில் உதவி ஆய்வாளர் பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமே வர வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து உதவி ஆய்வாளர்களே நேரிடையாகப் போய் ஆர்.டி.ஓவைப் பார்த்துள்ளனர்.
ஆனால் அவர்களிடமே, ஆர்.டி.ஓக்கள் கோபப்பட்டுப் பேசியிருக்கிறார்களாம். அத்துடன் அனுமதி தராமலும் (சில இடங்களில்) அனுப்பியிருக்கிறார்கள்.
இதனால் இந்த சிலை விவகாரத்தில் போலீசார் டென்சனில் இருக்கிறார்களாம். மேலும், ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டுமாம்.
அதேநேரத்தில், போலீஸார் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இதன் பாதுகாப்பு பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, ஒரு காவல் நிலையத்துக்குட்பட்ட எல்லையிலேயே பல சிலைகளை வைத்திருந்தால், அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது மற்ற சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் இருப்பதாக காவல் துறை சார்பில் கூறப்படுகிறது.
அதிலும் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணிக்கு போலீசாரை ஈடுபடுத்துவதால் இன்னும் சிரமம் ஏற்படுகிறது” என்கின்றனர்.
வணங்காமுடி
விநாயகர் சிலைகள் வைக்க போலீஸே அனுமதி வாங்கும் விசித்திரம்!