தமிழக அரசு மருத்துவமனைகளில் தூய்மை இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளராக பொறுப்பேற்றது முதல் தொடர் ஆய்வுகளை நடத்தி வருகிறார் ககன் தீப் சிங் பேடி,
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முக்கிய அறிக்கை ஒன்றை அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பினார் ககன் தீப் சிங் பேடி.
அதில், மருத்துவமனைகளில் குடிநீர் தரமாக இருக்க வேண்டும், படுக்கைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தினம் தோறும் சலவை செய்து பெட்ஷீட்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
இதனை அறிக்கையோடு மட்டும் நிறுத்திவிடாமல், அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேற்று (ஆகஸ்ட் 25) சென்னையில் இருந்து நாகை சென்றார் சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி. வழியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை மேற்கொண்டார்.
அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்ற ககன் தீப் சிங் பேடி, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சமையல் செய்யும் கூடம், வார்டுகள், மருத்துவ பணியாளர்கள் பதிவேடு என அனைத்தையும் ஆய்வு செய்தார்.
சமையல் செய்யும் இடத்தில் ஆய்வு செய்த ககன் தீப் சிங் பேடி, சமையல் பாத்திரங்கள் தூய்மையாக இருக்கிறதா?. பாத்திரங்களை எப்படி கழுவுகிறீர்கள் என கேட்டறிந்தார்.
அங்கு ஊழியர்கள் சமைத்துக்கொண்டிருந்த நிலையில், பாய்லரில் இருந்த சாப்பாட்டை திறந்து காட்டச் சொல்லி பார்த்தார். சமைத்து வைத்திருந்த சாம்பார், கூட்டு ஆகியவற்றையும் திறந்து காட்டச் சொல்லியும், குடிநீரின் தரம் எப்படி இருக்கிறது என்று குடித்து பார்த்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்த மின்சாரத்தில் இட்லி அவிக்கும் ஸ்டீம் பாய்லர் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.
அப்போது பணியில் இருந்த செவிலியர் ஜெயசித்ராவிடம், “பெட்சீட்கள் எப்படி சலவை செய்யப்படுகின்றன. அதனை எங்கு காய வைக்கிறீர்கள்? தினம்தோறும் பெட்ஷீட்கள் மாற்றப்படுகிறதா?” என விசாரித்தார்.
அதற்கு, “தினசரி ஒவ்வொரு கலரில் பெட்சீட்கள் மாற்றப்படுகின்றன. இன்று (நேற்று – ஆகஸ்ட் 25) மெரூன் கலரில் மாற்றப்பட்டுள்ளன” என்று விளக்கம் அளித்தார் செவிலியர் ஜெயசித்ரா.
தொடர்ந்து, “மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் துணி துவைக்கும் இடம், வார்டுகள் ஆகியவற்றின் தூய்மை குறித்து ஆய்வு செய்தேன். எல்லாம் சுத்தமாக இருந்தன. டாக்டர் செந்தில், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்களுக்கு எனது பாராட்டுகள்” என்று தனது கைப்பட பாராட்டு கடிதத்தையும் எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் ககன் தீப் சிங் பேடி.
அதுபோன்று திரூவாரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளி, புற நோயாளிகள் பகுதி, கிச்சன் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, “ஒரு நாளைக்கு 6 பெட்ஷீட்கள் மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைக்கு என்னென்ன தேவையோ, என்ன குறை இருக்கிறதோ சொல்லுங்கள். நாங்கள் அதனை சரி செய்கிறோம். என்ன தேவையோ அதை அனுப்பி வைக்கிறோம்” என்று கூறிவிட்டு சென்றார்.
அதுபோன்று நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு செய்தார்.
சுகாதாரத் துறை செயலாளரின் இந்த அதிரடி ஆய்வுகளால், மற்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் அலர்ட் ஆகி வருகின்றன.
இதுகுறித்து அரசு மருத்துவமனைகள் தரப்பில் விசாரித்த போது, “சுகாதாரத் துறை செயலாளரின் திடீர் விசிட்டால், அரசு மருத்துவமனைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதோடு இதுவரை பணி செய்யாமல் ஏமாற்றி வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பணி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தூய்மையில் தனியார் மருத்துவமனைக்கு சமமாக இனி அரசு மருத்துவமனைகளும் இருக்கும். இதனால் அரசு மருத்துமனைக்கும் மக்கள் அதிகம் வருவார்கள்” என்கிறார்கள்.
பணி செய்யாத மருத்துவர்களை பணியிட மாறுதலில் அனுப்பவும் ககன் தீப் சிங் பேடி நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா, வணங்காமுடி
புதிய நில வழிகாட்டி மதிப்பு : உங்கள் ஊரில் எவ்வளவு தெரியுமா?