ஆரோக்கியத்தை விட முக்கியமானது எதுவுமில்லை. ஆனால் அரசு மருத்துவமனைக்கு சென்றால் இருக்கிற ஆரோக்கியமும் போய்விடும் என்பது தான் மக்களின் மன நிலையாக இருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் கட்டிட வசதிகள், திறமையான செவிலியர்கள், தகுதியான மருத்துவர்கள், ஆய்வு கூடங்கள், எக்ஸ்ரே முதல் எம்ஆர்ஐ ஸ்கேன் வரை அனைத்து மருத்துவ உபகரணங்களும் உள்ள போதும், எவ்வளவு செலவானாலும் தனியார் மருத்துவமனைக்கே சென்று விடுவோம் என மக்கள் கருதுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் தூய்மையாக இல்லாததுதான். கழிவறை தூய்மையாக இருக்காது, தரை சுத்தமாக இருக்காது, குடிநீர் இருக்காது, படுக்கை வசதி இல்லாதது, இருந்தாலும் அவை பராமரிக்கப்படாதது என மக்களிடம் அரசு மருத்துவமனைகளை பற்றி கேட்டால் அவ்வளவு குறைகளை கொட்டித் தீர்க்கிறார்கள்.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளை அலசி ஆராய்ந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளார் சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி.
முதலில் டிஎம்எஸ் மூலமாக செவிலியர்கள் இடமாற்றம் செய்வதை நிறுத்தினார். வேறு டிஎம்எஸை நியமித்தார்.
இதனால் செவிலியர்களுக்கு இடமாற்றம் வாங்கி கொடுத்து கொழுத்துப்போன புரோக்கர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக டிஎம்எஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அடுத்தபடியாக பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். பயோமெட்ரிக் பதிவேட்டை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவு போட்டுள்ளார்.
இதன்மூலம் மருத்துவர்கள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைவரும் சரியான நேரத்திற்கு வருகிறார்களா? இல்லையா? என கண்காணிக்கப்படுகின்றனர்.
இதில் குறிப்பாக சில அரசியல் அதிகாரம் படைத்த டாக்டர்கள் காலையில் 6.30 மணிக்கு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வந்து பயோமெட்ரிக்கில் பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு வாக்கிங் சென்று மற்ற வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் 9.00 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு வருவதையும், அதனால் புறநோயாளி பகுதியில் கூட்டம் அதிகரித்து வருவதையும் ரகசியமாக கண்காணித்து வருகிறார் ககன் தீப்சிங்பேடி.
இதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளை வைத்துக்கொண்டு, அரசு மருத்துவமனையை ஆள் பிடிக்கும் இடமாக பயன்படுத்தி வரும் அரசு மருத்துவர்கள் பட்டியலையும் எடுத்து வருகிறார்.
இதுபோன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஐந்து பக்கத்தில் ஒரு அரசு ஆணையை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும் அனுப்பியுள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சட்டமன்ற அறிவிப்பு எண் 115/2022 -2023ல், சுத்தமான மருத்துவமனை பிரச்சாரம் ஒரு நிலையான திட்டம், புறந்தூய்மை அகவாய்மை அமைவதே அழகான மருத்துவம் ஆகும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்த களத்தில் இறங்கியுள்ள ககன் தீப் சிங் பேடி மருத்துவமனைகளுக்கு அனுப்பிய உத்தரவில், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், பெட்ஷீட், எத்தனை உள்ளன. இதில் எவ்வளவு பயன்படுத்தப்படுகின்றன. கழிவறைகள் எத்தனை உள்ளன. அதில் எத்தனை பயன்படுத்தப்படுகின்றன, ஆர்.ஓ. வாட்டர் யூனிட் வேலை செய்கிறதா? இல்லையா? என்ற அனைத்து தகவல்களையும் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கூகுள் ஷீட்டில் ரிப்போர்ட் அனுப்பவேண்டும்.
மருத்துவமனைகளில் அனைத்து வார்டுகளிலும் கட்டில்கள் சீரான வரிசையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சேதமடையாத படுக்கை விரிப்புகள் மற்றும் அதே நிறத்திலான தலையணை உறைகள் பயன்படுத்தவேண்டும். படுக்கை விரிப்புகள் பொறுத்தமட்டில் படுக்கைகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
படுக்கை விரிப்புகளை அன்றாடம் சலவை செய்து பயன்படுத்தவேண்டும். புதியதாக வாங்கிய படுக்கை விரிப்புகளை அவ்வப்போது பயன்படுத்துவதை கைவிட்டு தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். போதிய அளவில் கிருமி நாசினியை இருப்பு வைத்து பயன்படுத்தவேண்டும். இவைகளை செவிலியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ரவுண்ட்ஸ் போகும்போது கவனிக்க வேண்டும் என பலவிதமான உத்தரவுகளை போட்டுள்ளார். அதை கண்காணித்தும் வருகிறார்.
நாம் மின்னம்பலம் சார்பில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடியை, தொடர்புகொண்டு பேசினோம். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஏழை எளிய அனைத்து மக்களுக்கும் சிறப்பான சிகிச்சைகள் அளிக்க அரசு தேவையானதை செய்து கொடுத்து வருகிறது, அனைத்து பிரிவுக்கும் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள்” என்றார்.
குஜராத், கேரளா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக அரசு மருத்துவமனையில் தரமும் தூய்மையும் இல்லையே என்று குற்றம்சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு, “மற்ற மாநிலத்திலிருந்தும் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் உள்நோயாளியாகவும் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த பாடுபட்டு வருகிறார்கள். சில காலங்களில் அனைவரும் அரசு மருத்துவமனையை நோக்கி வருவார்கள். இனி அரசு மருத்துவமனைகள் சிகிச்சையிலும் தூய்மையிலும் அசத்தலாக இருக்கும்” என்றார்.
– வணங்காமுடி
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு!
மாதம் ரூ.1000 பெறுவதற்கான தரவு : முதல்வர் கொடுத்த அப்டேட்!
இவை அனைத்தும் நடந்தால் நீங்கள் கடவுள் சார்..