சென்னையில் இன்று தொடங்குகிறது ஜி20 பணிக்குழு கூட்டம்!
சென்னையில் ஜி20 கூட்டமைப்பின் 2வது நிதி கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் இன்று (மார்ச் 24) தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜி20 கூட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்கும். அதன்படி, 2023-ம் ஆண்டின் ஜி20 தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் இரண்டாவது நிதி தொடர்பான கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் இங்கிலாந்து நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி தலைமையில்,
20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற உள்ள ஜி20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்தில் மேற்கூறிய பிரச்சனைகள் சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கொள்கை முடிவு சார்ந்த அனுபவங்களை விவாதிக்க உள்ளனர்.
ஜி20 கட்டமைப்புப் பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பருவ நிலை மாறுபாடு மீதான மேக்ரோ பொருளாதாரத்தின் தாக்கங்கள் மற்றும் நிதி பரிமாற்ற பாதைகள் என்ற தலைப்பில் நாளை (மார்ச் 25) விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விவாதமானது சிஓபி 28-க்கு தலைமை வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படுகிறது.
ஜி20 பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார், ஜி20 கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள லாட்ஜ், மேன்ஷன்ஸ் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் தீவிர வாகன பரிசோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மோனிஷா
அண்ணாமலை அமித்ஷா சந்திப்பு: நடந்தது என்ன?