பாட புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம்!

Published On:

| By christopher

கடலூரில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அமைச்சர், உறவினர்கள், கிராம மக்கள் மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பாடப்புத்தகத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தினர். கடந்த 17ம் தேதி போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஸ்ரீமதியின் மரணம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டது.

மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்வது தொடர்பாக பெற்றோர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நீதிமன்றம் விடுத்த அறிவுறுத்தலின்படி மாணவி ஸ்ரீமதியின் உடலை இன்று பெற்றுக்கொண்டனர்.

மாணவியின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸுக்கு முன்னும் பின்னும் 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 6 காவல் ஆய்வாளர்கள் என பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

உயிரிழந்து 10 நாட்களுக்கு பிறகு எடுத்துவரப்பட்ட மாணவியின் உடல் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டதும் முதலில் வீட்டிற்குள் எடுத்துச் சென்று வைக்கப்பட்டது. பின்னர் வெளியே எடுத்து வந்து ஐஸ் பெட்டியில் வைத்து பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மாணவியின் உடலை பார்த்து உறவினர்கள், உள்ளூர் மக்கள் கதறி அழுது கண்ணீர் வடித்த காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், காவல்துறை ஐஜிக்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாணவியின் உடல் ஊர்மக்கள் சூழ ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாணவியின் தந்தை தனது மகளை கடைசியாக பார்த்து அழுதபடி இறுதி சடங்குகளை செய்தார். அதனையடுத்து உறவினர்கள், அமைச்சர் உள்ளிட்டோர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவிக்கு பிடித்த +2 விலங்கியல் புத்தகத்துடன் ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share