தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் இன்று (டிசம்பர் 23) நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த அருண் குமார் மிஸ்ராவின் பதவிகாலம் கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது.
இடைக்கால தலைவராக விஜய பாரதி சயானி பொறுப்பு வகித்தார். இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அடங்கிய உயர்மட்டகுழு அடுத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் குறித்து ஆலோசித்து முடிவெடுத்தது.

அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் பெயரை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது.
இன்று (டிசம்பர் 23) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார்.
யார் இந்த ராமசுப்பிரமணியன்?
தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடியில் பிறந்த ராமசுப்பிரமணியன், இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் பிஎஸ்.சி பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி முடித்தார்.
1983ல் பார் கவுன்சிலில் சேர்ந்தார். பிறகு சென்னை உயர் நீதிமன்றம், மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் மன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். சிவில் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களில் ஆஜராகி வாதாடினார்.
31-07-2006 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 9-11-2009 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதி ஆனார். பின்னர், தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
2019 ஜூன் முதல் ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். 2019 செப்டம்பர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஜூன் 29, 2023 அன்று ஓய்வு பெற்றார்.
வி. ராமசுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய காலக்கட்டத்தில் 102 தீர்ப்புகளை எழுதியுள்ளார். அதாவது ஆண்டுக்கு 27.7% தீர்ப்புகளை வழங்கியுள்ளார்..
தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற இரண்டாவது நீதிபதி என்ற பெருமையை பெற்றவர் வி.ராமசுப்பிரமணியன்.
முக்கிய வழக்குகள்
மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை செல்லும்” என்று 4 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் ஒரு நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியன் இடம் பெற்றிருந்தார்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ரிசர்வ் வங்கி விதித்த இந்த தடையை 2020ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவராக வி.ராமசுப்பிரமணியன் இருந்தார்.
இதுபோன்று பல்வேறு முக்கிய வழக்குகளை கையாண்டவர் முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன்.
செந்தில் பாலாஜி வழக்கில்….
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாகவும், இருதரப்பும் சமரசமாகச் செல்ல விரும்புவதாகவும் கூறியதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்தது.
இதை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், “சமரசம் என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது தவறானது. அந்த தீர்ப்பை நாங்கள் ரத்து செய்கிறோம்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கை மீண்டும் தொடக்கத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எழுத்தாளர்….
ராமசுப்ரமணியன் தமிழ் மொழிக்கு தனது எழுத்தின் மூலம் பங்களிப்பு செய்துள்ளார். கம்பனில் சட்டமும் நீதியும் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். செய்தித்தாள் ஒன்றில், ’அறிவியலுக்கு அப்பால்’ என்ற தலைப்பில் 27 வாரங்கள் தொடர் எழுதியுள்ளார். “சொல் வேட்டை” என்ற தலைப்பில் 50 வாரங்கள் கட்டுரை எழுதியுள்ளார்.
இந்தசூழலில், தற்போது தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மாற்று சினிமாவின் முன்னோடி இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்!
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு விஜய் சொன்ன பதில்… திசை திரும்புகிறதா அதிமுக? காத்திருக்கும் மோடி