சுரானா குழுமத்திற்குத் தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று (மே 31) முடக்கியுள்ளது.
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ மற்றும் எஸ்பிஐ வங்கியிடம் இருந்து 3,986 கோடி ரூபாய் கடன் பெற்று பண மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று வங்கிகள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதுபோன்று பண மோசடி தடுப்பு சட்டம் 2002 இன் படி, அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் ஏற்கனவே சுரானா குழுமத்திற்குச் சொந்தமான 67 காற்றாலைகள் உட்பட 113 கோடி ரூபாய் மதிப்பிலான 75 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
தொடர்ந்து 11.62 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் முடக்கப்பட்டதாகக் கடந்த ஆண்டு இறுதியில் அமலாக்கத்துறை அறிவித்தது.
இந்த சூழலில், இன்று 78 அசையா சொத்துக்கள் மற்றும் 16 அசையும் சொத்துக்கள் உட்பட 124 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 248.98 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பிரியா