இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணையை வெளியிட்டு, உடனடியாக உற்பத்தியைத் தொடங்க அரசு உத்தரவிட வேண்டும் என விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 5 லட்சத்து 40,000 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை நம்பி 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நேசவாளர்கள் உள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் மட்டும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் பருத்தி காடா துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதைத் தவிர, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் செயற்கை இழை துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆர்டர் இல்லாததால் பாதிப்பு: நூல் விலையில் ஏற்ற, இறக்கம், இறக்குமதி செய்யப்படும் துணிகள் உள்ளிட்ட காரணங்களால், கடந்த இரண்டு ஆண்டுகளாக விசைத்தறித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உடைக்கப்பட்டு இரும்பு கடைக்கு சென்ற நிலை ஏற்பட்டது.
தற்போது, போதிய ஆர்டர் இல்லாத நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆர்டரை தாமதமின்றி வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், “தமிழகத்தில், 238 விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் 66,000 விசைத்தறிகளில், பள்ளி சீருடை மற்றும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ஆறு முதல் ஏழு மாதம் வரை வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
இலவச வேட்டி சேலை உற்பத்தியில், 80 சதவிகிதம் வரை, ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரக விசைத்தறியாளர்களே உற்பத்தி செய்கிறார்கள். தற்போது இலவச பள்ளி சீருடைக்கான ஆர்டர் இருந்தாலும், அது போதுமானதாக இல்லை.
போதுமான ஆர்டர் இல்லாத நிலையில், பெரும்பாலான விசைத்தறி பட்டறைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் வேலையின்றி, வேறு வேலைகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைப் போக்க தமிழக அரசு இலவச வேட்டி சேலை உற்பத்தியை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதற்கான அரசாணையை பிறப்பித்து, நூல் பரிவர்த்தனைக்கான டெண்டரை வெளியிட வேண்டும். அப்போதுதான் ஜூலை மாதத்தில் உற்பத்தியைத் தொடங்க முடியும்.
ஜனவரி மாதம் பொங்கலுக்கு 1.73 கோடி சேலைகள், 1.68 கோடி வேட்டிகளை அரசு வழங்க வேண்டியுள்ளது. ஜூலையில் உற்பத்தியைத் தொடங்கினால், டிசம்பர் 25-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க முடியும்.
உற்பத்தியைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால், உரிய காலத்தில் இலவச வேட்டி சேலைகளை வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இலவச வேட்டி சேலை உற்பத்தி பணிகளை அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : கலைஞர் பிறந்தநாள் முதல் வெப்ப அலை எச்சரிக்கை வரை!
கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் சாம்பார்
அருணாச்சல் பாஜக… சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா… மீண்டும் ஆட்சியமைக்கும் ஆளும் கட்சிகள்!
கோவை எக்சிட் போல்: அண்ணாமலை என்ன ஆவார்?
பியூட்டி டிப்ஸ்: உங்கள் மூக்குக் கண்ணாடியை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?