பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துவிட்டார் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி சேலைகள் தயாரிக்கப்பட்டன.
ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்தும் இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை என்றும் பொங்கலுக்கு முன்னரே வேட்டி சேலை வழங்க வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாகக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் மிக சீரிய திட்டங்களில் ஒன்றாக 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்தினை பொங்கல் 2023-க்கு செயல்படுத்தக் கொள்கை அளவிலான ஆணைகள் 09.09.2022 அன்று வழங்கியும் மற்றும் அதற்காக மொத்த ரூபாய் 487.92 கோடி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 177.64 இலட்சம் சேலைகள் மற்றும் 177.23 இலட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய வருவாய் துறையின் தேவைப்பட்டியல் பெறப்பட்டது. அதனடிப்படையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்டி சேலை உற்பத்திக்குத் தேவைப்படும் பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல் இரகங்களில் 40எஸ் சிட்டா, 60எஸ் கோன், 40எஸ் கோன் நூல் கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது போக எஞ்சிய தேவைப்படும் நூல் இரகங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கும் குழு மூலம் 23.09.2022 அன்று இறுதி செய்யப்பட்டு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
கோ-ஆப்டெக்ஸ் தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் ஆகிய நிறுவனங்கள் முகமை நிறுவனங்களாக நியமிக்கப்பட்டு 01.11.2022 முதல் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டது.
வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ள தேவைப்பட்டியலின் படி அனைத்து தாலுகாக்களுக்கும் மேற்படி வேட்டி சேலைகளை விநியோகம் செய்யும் பணிகள் 15.12.2022 முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 27.01.2023 தேதியில் 137.66 இலட்சம் சேலைகள் (77.5 %) மற்றும் 112.81 இலட்சம் வேட்டிகள் (63.7%) துறையின் கீழ் செயல்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அவற்றுள் 122.78 இலட்சம் சேலைகள் (69.11%) மற்றும் 97.02 இலட்சம் வேட்டிகள் (54.74%) பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வருவாய்த் துறை தேவைப்பட்டியலின்படி அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு முன்னரே 09.01.2023 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சத்தியா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலைகள் விநியோகிக்கும் பணியைத் துவக்கி வைத்தார். எனவே, வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவலாகும்.
பொங்கல் 2013 பின்னர் நடப்பாண்டில் 10 மாறுபட்ட வண்ணங்களில் 15 விதமான மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளுடன் தரமான சேலைகளும் 5 மாறுபட்ட வண்ணங்களில் 1 அங்குல கரையுடன் கூடிய தரமான வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை பொறுத்தவரை, திட்டத்திற்குத் தேவையான அனைத்து சேலைகள் மற்றும் வேட்டிகள் தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நமது தமிழ்நாடு மாநிலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், இத்திட்டம் தொடங்கிய 1983-ம் ஆண்டு முதல் அனைத்து ஆண்டுகளிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகள் தவிர நடப்பாண்டு வரை மாநிலத்தில் மட்டுமே வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாறாக 2012 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளிச்சந்தையில் வேட்டி சேலைகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், இத்திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கும் பணி துவக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்யப்படுகிறது. அதைப்போலவே, நடப்பு 2023ஆம் ஆண்டிற்குப் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வேட்டி சேலைகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் துவக்கப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் நிறைவுறும்.
கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இலவச வேட்டி சேலை வழங்கும் பணி 2013ஆம் ஆண்டில் 14.3.2013-லும், 2014ஆம் ஆண்டில் 25.8.2014-லும் முடிவடைந்துள்ளன. இவ்வாறு, பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பல மாதங்கள் கழித்து அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் வசதியாக மறந்துவிட்டார்.
வேட்டி சேலை விநியோக திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
ஈரோடு கிழக்கு: வேட்பாளரை அறிவித்த சீமான்
தேர்தல் கூட்டணி: திடீரென எடப்பாடியை சந்தித்த ஜிகே வாசன்