நீலகிரி, தர்மபுரியில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த தேவைப்படும் கூடுதல் கேழ்வரகை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்..
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதிலாகச் சிறு தானியங்கள் வழங்கப்படும் என சமீபத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று (மே 3) முதல் நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாலகொலா மீக்கேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மற்றும் தர்மபுரியில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படும்.
நீலகிரியில் இந்தத் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29,000 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இதற்காக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்துக்கு 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு இந்திய உணவு கழகத்தின் மூலம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த தேவைப்படும் கூடுதல் கேழ்வரகை கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும்” என்று கூறினார்.
தமிழகத்தில் விளையும் கேழ்வரகில் 90 சதவிகிதம் பயிர் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கிடைக்கிறது.
மீதமுள்ளவை சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து கிடைக்கிறது.
கேழ்வரகு கொள்முதல் செய்வதற்காக தர்மபுரி, பெண்ணாகரம், ஓசூர், சூளகிரி போன்ற பல இடங்களில் ஒன்பது நேரடி கொள்முதல் நிலையங்களை தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் அமைத்துள்ளது.
இவற்றில் கிலோவுக்கு ரூ.35.78 காசு வழங்கப்படுகிறது. அரசு கேழ்வரகு கொள்முதல் செய்யும் தகவல் பல விவசாயிகளைச் சென்றடையாததால் இதுவரை 191 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ பருப்பு பாயசம்