காப்பீடு திட்டத்தில் மோசடி? முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை!

Published On:

| By christopher

காப்பீடு திட்டத்தில் மோசடி? முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை!

அரசு ஊழியர்களின் நலன் கருதி புதிய நல்வாழ்வுக் காப்பீடுத் திட்டம் (NHIS) 2008ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அரசு ஊழியர்களிடம் விருப்புரிமை கோரப்பட்டு, இந்த திட்டத்தை செயல்படுத்த United India insurance நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மேலும் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். அதன்படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் 2025 ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் அந்நிறுவனத்திற்கு புதிய காப்பீடு திட்டத்தை மீண்டும் கொடுக்க கூடாது என்றும், வேறு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும் என்றாலும் அரசு ஊழியர்களின் ஒப்புதலை கோர வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி அவர்களை தொடர்புகொண்டு கேட்டோம்.

அப்போது அவர், “புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு பதில் package அடிப்படையில் காப்பீட்டுத் தொகை வழங்கி வருவதையும், காப்பீட்டு நிறுவனம் செய்யும் மோசடிகளுக்கு தமிழ்நாடு அரசு உடந்தையாக இருப்பதையும் தொடர்ந்து பல கடிதங்கள் மூலம் பல்வேறு முறை ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

அக் கடிதங்கள் மீது அரசு ஊழியர்கள் நலன் காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காப்பீட்டு நிறுவனத்தின் நலனை பாதுகாக்கவே தமிழ்நாடு அரசு செயல்பட்டு வந்துள்ளது என்பதையும் வேதனையுடன் தமிழ்நாடு முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்நிலையில், அரசாணை எண்: 160, நிதித் துறை, நாள்: 30.6.21-ன்படி காப்பீட்டிற்கான காலஅளவு 30.6.25 தேதியுடன் புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டம் முடிவடைய உள்ளது.

புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டம் 2025-2029 ஆண்டுக்கு புதுப்பிக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக அறிகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை NHIS திட்டத்தை புதுப்பிக்க காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு வருகிறது. 2008 ம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அரசு ஊழியர்களிடம் விருப்புரிமை கோரப்பட்டது.

ஆனால், இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் தொடர்வது தொடர்பாக அரசு ஊழியர்களிடம் 4 ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப உரிமை கேட்கப்படவில்லை. இச்செயல் ஜனநாயக உரிமை மறுப்பு மட்டுமல்ல, தார்மீக ரீதியாக தவறான நடவடிக்கை என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் NHIS திட்டத்தில் United India insurance நிறுவனம் அரசாணைக்கு புறம்பாக package அடிப்படையில் 30% லிருந்து 40% காப்பீடு தொகை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் United India insurance நிறுவனம் உட்பட பிற காப்பீடு நிறுவனங்களில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு 80% லிருந்து 100% காப்பீடு தொகை அந்நிறுவனங்கள் வழங்கி வருகிறது. NHIS திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டாலும், NHIS திட்டம் அரசு ஊழியர் நலனுக்கு பாதகமாக இருப்பதால் வேறு காப்பீட்டு நிறுவன மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் கூடுதலாக தனிப்பட்ட முறையில் பல்வேறு அரசு ஊழியர்கள் இணைந்துள்ளார்கள்.

அதே போன்று தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகள், தங்கள் பெற்றோரான அரசு ஊழியர்களை தாங்கள் இணைந்துள்ள தனியார் காப்பீட்டுத் திட்டங்களில் இணைத்து பாலிஸி எடுத்துள்ளார்கள். இதனால் ஒரே நேரத்தில் இரண்டு காப்பீடு திட்டங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் காவல்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத்துறை, பொது நிறுவனமான போக்குவரத்துத்துறை, ஆசிரியர்கள் என சுமார் 12 லட்சம் பேரை கட்டாயமாக NHIS திட்டத்தில் சேர்த்துள்ளது அரசு.

மாதந்தோறும் ஒரு நபருக்கு, மாதம் ஊதியத்தில் இருந்து 395 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. அப்படியென்றால் ஆண்டுக்கு 4,740 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி சுமார் 12 லட்சம் ஊழியர்களிடம் இருந்து ஆண்டுதோறும், 568 கோடியே 80 லட்சம் United India insurance நிறுவனத்திற்கு செல்கிறது.

இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை தமிழ்நாடு முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

எனவே, 2025-2029 ஆண்டுக்கு NHIS திட்டத்தை புதுபிக்கும் முன்பு அரசு ஊழியர்களிடம் விருப்புரிமை கோர வேண்டும் என்றும், மேலும், அரசு ஊழியர் நலனுக்கு எதிரான NHIS திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்” என ஜெய ராஜ ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

“பெண்களுக்கு பாதுகாப்பில்லா சமூகம், ஒருபோதும் விடுதலை அடையாது” : கனிமொழி

”என் பிறந்தநாள் வேண்டுகோள் இதுதான்” : தொண்டர்களுக்கு உதயநிதி கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share