தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த அறிவிப்பு மின் நுகர்வோர்களிடையே சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படுமா?. தாத்தா பாட்டி பெயரில் மின் இணைப்பு இருந்தால் என்ன செய்வது? ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருந்தாலோ அல்லது வாடகைகாராக இருந்தாலோ எப்படி மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது போன்ற சந்தேகங்கள் எழுந்தன

இந்த சந்தேகங்களுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து வந்தார். “100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவது தொடரும். மக்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணையதளம் வாயிலாகவும், மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் இணைத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்காகத் தமிழகத்தில் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மூன்று முறை ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 31 தான் ஆதாரை இணைக்க கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 2.60 கோடி மின் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்படாததால், ஜனவரி 31, பிப்ரவரி 15, பிப்ரவரி 28 என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இன்னும் 7 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். அவர்கள் வரும் 28 ஆம் தேதி வரை இணைத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில், தீக்கதிர் பொறுப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், மின் இணைப்பு -ஆதார் இணைப்பு தொடர்பாக எச்சரிக்கை பதிவொன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில், “‘எச்சரிக்கை, அன்புள்ள வாடிக்கையாளரே, கடந்த மாத மின் கட்டண பில் புதுப்பிக்கப்படவில்லை. உடனடியாக மின்சார அலுவலரை இரவு 9.00 மணிக்கு முன்பாக தொடர்பு கொள்ளவும். 7431829447 நன்றி’ என இப்படி ஒரு எஸ்.எம்.எஸ் எனக்கு வந்தது.
பொதுவாக ஈபி பில் கட்டவில்லை என்றால் ஏரியா லைன்மேன்தான் போன் செய்வார். பியூஸ் கட்டையை எடுக்க போறோம். பணம் கட்டிட்டு போன் பண்ணுங்க என்பார்.
யார் இந்த புது ஆபிசர் என நினைத்து, அதில் உள்ள நம்பருக்கு போன் செய்தேன். ஆசாமிக்கு தமிழ் தெரியவில்லை. இந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசினான்.
எந்த சர்விஸ் நம்பர் அப்டேட் ஆகவில்லை என்று கேட்டால், நீ நம்பரை சொல் பார்த்து சொல்கிறேன். அல்லது எந்த யுபிஐயில் பில் கட்டினாய். அந்த நம்பரை சொல் என்றான்.
எனக்கு எந்த நம்பரும் தெரியாது. மதுரையில் எந்த ஈபி ஆபிஸ் / தமிழில் பேசு என்று கூறியவுடன் டென்ஷனாகி, நீ போனை கட் செய், நான் கரண்டைகட் பண்றேன் என மிரட்டினான்.
நம்பர் தெரியாது என்றதால் கடுப்பாகிவிட்டான். சர்வீஸ் நம்பரை சொல்லியிருந்தால், அதன் மூலம் ஆட்டையை போட நினைத்திருப்பான் போல்.
ஏற்கெனவே, பேங்க் அக்கவுண்டை, ஆதாருடன் இணைக்கிறேன், நம்பர் சொல்லு என்று வந்த கோஷ்டி இப்ப ஆதார் வழியாக கரண்ட் மரத்திலும் ஏறுது. எச்சரிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த முகநூல் வாசிகள், தங்களுக்கு இதுபோன்ற குறுந்தகவல் வந்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
‘பேங்க் லோன்’, ‘ஏடிஎம் நம்பர்’, ‘ஆன்லைனில் வேலை’, ‘இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் கிப்ட் கிடைக்கும் என பிரபல நிறுவனங்களின் பெயரை பயன்படுத்துவது’ என பல மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஆன்லைன் மோசடி கும்பல் தற்போது ஆதார் மின் இணைப்பிலும் மோசடியில் ஈடுபட தொடங்கியிருக்கிறது. இதிலிருந்து உஷாராக இருக்க வேண்டும், தெரியாத நம்பரில் இருந்து வரும் லிங்க்குகளை, குறுஞ்செய்திகளை நம்பி எந்த தகவலையும் தெரிவிக்கக் கூடாது என தமிழக காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.
குறிப்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
“தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்குமான வளர்ச்சியாகும்”: ஸ்டாலின்