கோவையில் ஆன்லைன் செயலி நிறுவனத்தின் மீது மோசடி புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜனவரி 29) அந்நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
MYV3Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனம், விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் MYV3Ads நிறுவனத்தின் மீது கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி, அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்று கோவை நீலாம்பூர் L&T பைபாஸ் சாலையில் திரண்டனர். மோசடி புகார் எழுந்துள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
மிரட்டும் வகையில் மக்களை தூண்டிவிட்டுள்ளனர்!
இந்த நிலையில் புகாரளித்த அசோக் ஸ்ரீநிதி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “கோவையில் இன்று கூடியுள்ள கூட்டம் அந்த நிறுவனத்துக்காக வரவில்லை. நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் வருமானம் கட் ஆகிவிடும் என வாட்ஸ் அப்பில் மிரட்டும் வகையில் செய்தியை வெளியிட்டு, மக்களை வரவழைத்துள்ளனர். அவர்களும் பயந்து போய் தங்கள் பணத்தை இழந்துவிடுவோம் என்பதற்காக வந்துள்ளனர்.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் எம்.எல்.எம் பிசினஸ் மூலம் இந்தியாவில் ஆண்டுதொறும் பல கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அண்மையில் ஹிஜாவு நிறுவனம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்தது.
இதுநாள் வரை, மோசடி நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆனபிறகு மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள். அதன் பிறகு வழக்குப் பதிவு செய்யப்படும்.
ஆனால், இப்போது நாம் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல் முறையாக மோசடியை தடுப்பதற்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தங்கள் மீது தவறில்லை என்றால் நிறுவனத்தினர் முறையாக இந்த வழக்கை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு அரசையும், காவல்துறையையும் மிரட்டும் வகையில் மக்களை தூண்டிவிட்டு ஒன்று கூட வைத்துள்ளனர். அனுமதி இன்றி நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டியுள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
அழுத்தத்தின் பேரில் பொய் வழக்கு!
கோவை நீலாம்பூர் புறவழி சாலையில் திரண்டிருந்த மக்களுக்கு நடுவே காரில் வந்த My V3 Ads நிறுவன எம்.டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர், “எங்கள் நிறுவனத்தின் மீது ஒரு அரசியல் நிர்வாகி கொடுத்த அழுத்தத்தின் பேரில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தன்னெழுச்சியாக திரண்டுள்ளனர். அவர்களோடு பங்கேற்கவே நானும் வந்துள்ளேன். இங்கு மக்கள் திரண்டுள்ளதற்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் காரணம் அல்ல.
மக்கள் அனைவரும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரள திட்டமிட்டார்கள். இவ்வளவு பெரிய கூட்டம் கூட இந்த கூட்டம் கலெக்டர் ஆபீஸுக்கு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில், எல் & டி பைபாஸ் பகுதிக்கு வருமாறு எங்கள் வாடிக்கையாளார்களுக்கு கூறினேன்.
அதிகார வர்க்கத்திற்கு , மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு இடத்தை காட்ட வேண்டும் என்பதற்காக எல்.என்.டி பைபாஸ் பகுதியை சொன்னேன். இந்த பொய்வழக்கிற்கு எதிராக எங்கள் நிறுவனம் சார்பில் வழக்கு தொடருவோம்” என அவர் பேசியுள்ளார்.
இதற்கிடையே புகாரின் பேரில் MYV3Ads நிறுவனம் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோயம்பேட்டில் லுலு மால்… வதந்தியா? உண்மையா? : அரசு விளக்கம்!
ஷூட்டிங்கை கேன்சல் செய்து வெளியேறிய விசித்ரா… தினேஷ் தான் காரணமா?