சென்னையில் புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இன்று (ஆகஸ்ட் 19) அதிகாலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மணலி அருகே மாத்தூர் எம்எம்டிஏ இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் உடையார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பிரியதரிதா, சங்கீதா, பவித்ரா என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
சோமாட்டோவில் ஊழியராக பணிபுரிந்து வரும் உடையாருக்கு சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது காலில் அடிபட்டது. இதனால் அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மனைவி கவனித்து வருகிறார்.
வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள உடையாரின் அம்மா சந்தான லட்சுமி நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உடையாரின் மனைவி வீட்டில் இருந்து கரும்புகை அதிகளவில் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பாட்டியும், 3 சிறுமிகளும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய போலீசார் புகையில் சிக்கிய நால்வரின் உடல்களையும் மீட்டனர்.
சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சந்தான லட்சுமி இரவு தூங்க போகும் போது கொசுவை விரட்டும் லிக்விட் இயந்திரத்தை ஆன் செய்துள்ளார்.
இரவில் அதிகளவு மின்சாரம் பாய்ந்ததால் கொசு விரட்டி இயந்திரம் உருகி அருகில் இருந்த பேப்பர் அட்டையின் மீது விழுந்ததில் அதில் தீ பற்றியதாக கூறப்படுகிறது.
அந்த தீயினால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் நன்றாக தூக்கத்தில் இருந்த நான்கு பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு தப்பிக்க முடியாமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை கண்டு தாய் செல்வி கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் மணலி எம் எம்.டி.ஏ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
’பெரியார், காமராஜர், அண்ணா வாழ்ந்த தமிழ்நாடா இது?’: பா.சிதம்பரம் வேதனை!
Comments are closed.