”ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும்” என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 19 சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரவை ஆலை முகவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் ஆணைப்படி செறிவூட்டப்பட்ட அரிசியை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த செறிவூட்டப்பட்ட அரிசி இரும்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது. 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும்.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முற்றிலும் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும். கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர். நெல்லை சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.
நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2024 வரை மூன்று கட்டங்களாக செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்து, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், கடந்த 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் 21ஆம் தேதி, தமிழகத்தில் முதல்முறையாக முன்னோட்ட அடிப்படையில் திருச்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செறிவூட்டப்பட்ட அரிசி
செறிவூட்டப்பட்ட அரிசி என்பது ஆலைகளில் நெல்லை அரிசியாக மாற்றும் போது, 1 கிலோ அரிசி மாவாக அரைக்கப்படும். அதில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் கலந்த கலவை சேர்க்கப்படும். அந்த கலவை அரிசி வடிவில் மாற்றம் செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும். அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும்.
ஜெ.பிரகாஷ்
இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்: ராகுல் காந்தி
அண்ணாமலை வாட்ச்: உண்மையிலேயே ரஃபேல் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதா?