சென்னையில் இரவு நேர ஃபார்முலா கார் பந்தய போட்டி நேற்று இரவு நடந்து முடிந்தது. தெற்காசியாவில் முதல்முறையாக இந்த போட்டி நடைபெற்றது.
இந்த பந்தயத்தின் பயிற்சி போட்டியை நேற்று முன் தினம் இரவு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் நாளில் தாமதமாகத்தான் போட்டி தொடங்கியது. ஓடுபாதையில் சில மூலை பகுதிகளில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டிய எப்.ஐ.ஏ அதிகாரிகள் அதனை சரி செய்ய அறிவுறுத்தினர்.
அது சரி செய்யப்பட்ட பிறகு எப்.ஐ.ஏ சான்றிதழ் கிடைத்து போட்டி தொடங்கப்பட்டது.
முதல் நாளில் பயிற்சி போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளான நேற்று தகுதிச் சுற்று மற்றும் பிரதான பந்தயங்கள் நடைபெற்றன.
இதில் 8 அணிகளைச் சேர்ந்த 16 வீரர்கள் கலந்துகொண்டனர். ஓடுபாதையில் பந்தய இலக்கான 3.5 கிமீ தூரத்தை யார் அதிகமாக சுற்றுகிறாரோ அவரே வெற்றியாளர் என்று தேர்ந்தெடுக்கப்படுவார்.
தகுதிச் சுற்றில் கொச்சி காட்ஸ் அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்டர் முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து இரவில் 2ஆவது பந்தய சுற்று நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் கார் பழுதால் விளையாட முடியாமல் போன ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியைச் சேர்ந்த தென் ஆப்ரிக்காவின் அகில் அலிபாய் முதலிடம் பிடித்தார்.
134.1 கிலோமீட்டர் வேகத்தில் காரை இயக்கி 16 முறை சுற்றிய அவர், 30 நிமிடங்கள் 03.445 வினாடிகளில் வெற்றி பெற்றார்.
அவரை விட 0.259 வினாடி பின் தங்கி இந்தியாவின் நந்தன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
மூன்றாவது இடத்தை அகமதாபாத் அணியின் ஜேடன் ப்ரியாட் பிடித்தார்.
பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை வரலாற்றில் இந்த கார் பந்தயத்துக்கு சிறந்த இடம் உண்டு. இதற்காக ஒத்துழைத்த காவல்துறை, சுற்றுலாத் துறை பொதுப்பணித்துறை என அனைவருக்கும் நன்றி.
அடுத்த வருடம் இங்கு ரேஸ் நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். இந்த ரேஸ் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ரேஸ் நடத்த கால தாமதம் ஏற்பட்டதற்கு பாதுகாப்புதான் காரணம். முதல்முறை நடந்திருக்கிறது, அதில் சின்ன சின்ன பிரச்சினை ஏற்படத் தான் செய்யும். எப்.ஐ.ஏ சான்றிதழ் பெற்ற பிறகு எந்த பிரச்சினையும் இல்லாமல், சிறப்பாக நடைபெற்றது” என்றார்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமோக வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகள்.
செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, தமிழ்நாடு சர்வதேச சர்ப் ஓபன் 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி முடித்து, தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது.
உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் சாத்தியமான முதலீடுகளுடன் தமிழ்நாடு விளையாட்டு துறையிலும் முன்னோடியாக உள்ளது. அதனால் தான் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவோம்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஊட்டியில் வீடு வாங்க விஷம் வைத்து பெண்ணைக் கொன்ற கணவர் குடும்பம்!
வால்பாறை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது!