பார்முலா 4 கார் ரேஸுக்கு முன்னதாக பெறப்பட வேண்டிய எப்.ஐ.ஏ சான்றிதழ் இன்னும் பெறப்படாமல் இருப்பதால் போட்டியை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் இன்றும், நாளையும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
இதற்கிடையே தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பார்முலா 4 கார் ரேஸுக்கு தடைகோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு (எப்.ஐ.ஏ) சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு போட்டிக்கு அனுமதி வழங்கியது.
இதுதொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், ”உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தும் சாலைகளை இன்று எப்.ஐ.ஏ தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்த பின் உத்தரவாத சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். அதனை என்னுடைய வழக்கறிஞர் இமெயிலுக்கு உடனடியாக 12 மணிக்குள் FIA லைசன்ஸ் அனுப்பப்பட பிறகு தான் கார் ரேஸ் துவக்கப்பட வேண்டும்.
மேற்படி ஆய்வுகள் நேர்மையாக நடப்பது உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் அந்த ஆய்வை படம் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளின் முழு விவரங்களை தமிழக விளையாட்டு துறை வெளியிட வேண்டும். மேலும் அனைத்து ஆய்வுகளையும் அதன் விவரங்களையும் முழுமையாக ஆடியோ வீடியோ ரெக்கார்ட் செய்து பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஆய்வு செய்யப்பட்டு எப்.ஐ.ஏ சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 2 மணியாகும் நிலையில் இதுவரை சான்றிதழ் பெறப்படவில்லை.
இதனையடுத்து நேற்று இரவு மழையின் காரணமாக எப்.ஐ.ஏ அதிகாரிகளின் ஆய்வு இன்னும் முடிவடையவில்லை. எனவே சான்றிதழ் அளிப்பதற்கான காலக்கெடுவை 4 மணி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் அவசர முறையீடு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரேஷனில் வாங்காத ஆகஸ்ட் மாத பொருட்கள் செப்டம்பரில் கிடைக்குமா?: தமிழக அரசு பதில்!