DGP Rajesh doss absconding
பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கில் குற்றவாளியான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி விட்டதாக சிபிசிஐடி போலீசார் இன்று (மார்ச் 9) தெரிவித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ் காரில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் பெண் எஸ்.பி ஒருவர் அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது.
பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பில்,
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ராஜேஷ் தாஸ் உயர்நீதிமன்றம் வரை சென்ற நிலையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
எனினும் இந்த வழக்கில் சரணடைய அவகாசம் அளிக்கக் கோரி கடந்த வாரம் ராஜேஷ் தாஸ் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.
இந்த நிலையில் ராஜேஷ் தாஸை கைது செய்ய சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூர் கோமநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 5 பேர் கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் சென்றனர்.
ஆனால் அங்கு அவர் இல்லாத நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தலைமறைவான ராஜேஷ் தாஸ் வீட்டு காவலாளி மற்றும் பணிப்பெண்ணிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எலக்ஷன் ஃப்ளாஷ் : தெலுங்கு ஓட்டுகளைக் குறிவைக்கும் விடுதலைக் களம்!
எலக்ஷன் ஃப்ளாஷ் : திமுகவில் 4 பெண் வேட்பாளர்கள்… ஸ்டாலின் லிஸ்டில் யார் யார்?