தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (நவம்பர் 15) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீராங்கனை மரணம்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) தவறான சிகிச்சை காரணமாக இன்று (நவம்பர் 15) காலை உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பெரியார் நகர் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று, பிரியாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைக் கைவிடக் கோரி பூக்கடை காவல் நிலைய துணை ஆணையர் பிரதீப் மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவனை டீன் தேரணி ராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தை முடித்துக்கொண்டு வீராங்கனை பிரியாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
அமைச்சர் மரியாதை
இன்று மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீராங்கனை பிரியாவின் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் அறிவுறுத்தலின்படி, அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலுக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்கறையோடு செயல்பட வேண்டும்
மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ‘தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. ஆனால் காலில் சவ்வு கிழிந்ததற்காக ஒரு உயிர் பிரிந்திருக்கிறது என்றால் மருத்துவத் துறை எந்த அளவிற்குச் சீரழிந்து இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
பிரியா இறப்பதற்கு அரசு தான் முழு காரணம். ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைக்கோ, ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கோ வரும் போது அரசு ஊழியர்கள் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று நினைத்திருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது” என்று கூறினார் ஜெயக்குமார்.
மோனிஷா
ஸ்டாலின் ரூட்டில் எடப்பாடியின் டெல்டா பயணம்!
ஐபிஎல்: தொடங்கியது ஏலப் பேச்சு… எந்தெந்த அணியிடம் எவ்வளவு கோடி இருப்பு?