தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை, 3-வது ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலகத் தமிழர் தின விழாவை நடத்துகிறது. இந்த விழாவானது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (ஜனவரி 11,12) நடைபெற உள்ளது.
இவ்விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அயல்நாடுகளில் வசிக்கும் 1,400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்து உள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள் மற்றும் 48 பிற மாநில தமிழ் சங்கங்களைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பங்கேற்க உள்ளனர்.
முதல் நாள் அமர்வு!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழாவை இன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்க உள்ளார். இதில், சிறப்பு நேர்வாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இரண்டு நாள் நடைபெறும் இவ்விழாவுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். மேலும், அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்புரையுடன் முதல் நாள் விழா தொடங்குகிறது.
இந்நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்கள் மற்றும் ஒரு கவிஅரங்கமும் நடக்க உள்ளது. முதல் அமர்வாக நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் “தமிழின் தொன்மை – தொடர்ச்சி” குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்கின்றனர்.
அதை தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தலைமையில் “சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை – தொலைநோக்கு சிந்தனையும் செயலும் தலைமை” என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற உள்ளது.
பின்பு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில், “அயலக தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்து செயல்படுத்தும் திட்டங்கள்” என்ற தலைப்பில் அடையாள அட்டை, காப்பீடு வசதி, திருமண உதவித் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் குறித்த விவரங்களும் ஆணையர் அடங்கிய குழுவினரின் சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
அடுத்தடுத்த நிகழ்வுகளாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் “ஒளிரும் எதிர்காலம் – வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பிலும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் “வணிகத்தில் தமிழர்கள் – வாய்ப்பும் வளர்ச்சியும்” என்ற தலைப்பிலும் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது.
இரண்டாம் நாள் அமர்வில் முதல்வர் உரை!
இரண்டாம் நாளான நாளை முதல்வர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து, இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தங்களது பண்பாட்டு சுற்றுலா சென்ற அனுபவங்களை பகிர உள்ளனர்
மேலும், அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை 8 பிரிவுகளில் (தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம்) விருதுகள் வழங்கப்படுகின்றன.
“தமிழ் மொழி வளர்ச்சியில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு” குறித்த அமர்வின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பங்கேற்கிறார்.
“அயலகத்தில் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல்” குறித்த விவாத அமர்வு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற உள்ளது.
அயலகத் தமிழர் தின விழாவில், தமிழர் நலன், தமிழர் கலை பண்பாடு மற்றும் வணிகம், தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி, சர்வதேச தமிழ் சங்கம் என்ற கருப்பொருள் வாரியாக கண்காட்சி அரங்குகளை அமைத்து தமிழர் மரபு மற்றும் பண்பாடுகள் விளக்கப்பட உள்ளது.
மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் இங்கு முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக ஸ்டார்ட் அப், டிஎன் ஃபேம் உள்ளிட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை!