கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17) கால்பந்து வீராங்கனை ஆவார். கால் வலி ஏற்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பொதுச்செயலாளர் இராமலிங்கம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், “ சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் கடந்த 11-11-2022 அன்று பிரியா (18) என்கிற கால்பந்தாட்ட வீராங்கனைக்குக் கால் முழங்காலில் Arthroscopy அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த மாணவிக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டவுடன் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அறுவை சிகிச்சை (Amputation) செய்யப்பட்டு உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது.
மீண்டும் 14-11-22 அன்று உடல்நிலை மோசமடைந்து இறந்திருப்பது வருத்தத்திற்குரியது. இளம் பெண்ணின் இத்தகைய துயரமான சம்பவம் நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதுபோன்ற Arthroscopy அறுவை சிகிச்சைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போன்ற அனைத்து வசதிகளும் நிறைந்த பெரிய மையங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில்,
NHM -JICA project ன் கீழ் Arthroscopy செய்வதற்கு வசதிகள் குறைவாக உள்ள மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளில் எலும்பு முறிவு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் , அறுவை சிகிச்சை செய்யாத மருத்துவர்களிடம் விளக்கமும் (Memo) பல இடங்களில் துறை உயரதிகாரிகளால் கேட்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிப்பது இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகிறது.
பெரியார் நகர் மருத்துவமனை போன்ற சிறிய மருத்துவமனையில் பணிச்சுமையும் அதிகம் இருக்கும். அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர்கள் எடுத்த நிலையில், பெரியார் நகர் மருத்துவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற தவறை செய்தது போல் பொதுவெளியில் சித்தரிப்பது வருங்காலத்தில் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற உயர்தர அறுவை சிகிச்சை செய்யும் எண்ணத்தை அழித்துவிடும்.
ஆதலால் துறைரீதியான முறையான, விரிவான விசாரணை மூலம் சுகாதார கட்டமைப்பில் தகுந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
மருத்துவர்களுக்கு இலக்கு கொடுத்து அழுத்தம் தரக்கூடாது, அதுவே இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க உதவும்.
இதுமட்டுமல்லாமல் செவிலியர்கள் பற்றாக்குறை, உதவியாளர்கள் பற்றாக்குறை மருத்துவர்களுக்கான அதிக வேலைப் பளுவும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படக் காரணமாக அமைந்து விடக்கூடாது.
பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான சில கருவிகளுக்கு மருத்துவர்கள் தங்கள் சொந்த உபகரணங்களையே பயன்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்கள் மீது ஊடகங்கள் வன்மம் கொண்டு சித்தரிப்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவத் துறை தேசிய அளவில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அதி நவீன சிகிச்சைகளை மேற்கொண்டு மக்களுக்குச் சேவையாற்றி வருகிறார்கள்.
இது போன்ற துயர சம்பவங்களால் வருங்காலங்களில் மருத்துவர்கள் சிகிச்சைகளில் ஏற்படும் ஒரு சில சிக்கல்களைக் கண்டு அஞ்சி துணிந்து சிகிச்சை வழங்குவதில் தயங்கும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: ஜி-20 மாநாட்டில் மோடி