பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லா சென்னையில் மற்றொரு பொழுதுபோக்காக உணவுத் திருவிழா-2022 இன்று ( ஆகஸ்ட் 12 ) தொடங்கி இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இருக்கும் தீவுத் திடலில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உணவுத் திருவிழா ஆகஸ்ட் 14 வரை பாரம்பரிய உணவு வகைகளுடன் கோலாகலமாக நடக்கவிருக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து உணவு பண்டங்களும் இந்த உணவுத் திருவிழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த உணவுத்திருவிழாவில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா முதல் மதுரை பன் புரோட்டா வரை, ஆம்பூர் பிரியாணி முதல் திண்டுக்கல் பிரியாணி வரை, ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை அனைத்தும் கிடைப்பதால் அதனை ருசித்து பார்க்க சாப்பாட்டு பிரியர்கள் தீவு திடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த உணவுத் திருவிழாவை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை ,ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்துகிறது.
இதில் பங்குபெறும் குழந்தைகள் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது.
சென்னை உணவுத் திருவிழாவின் ஹைலட்டாக உலகம் முழுவதும் யூடியூப் வீடியோக்களால் கலக்கிக் கொண்டிருக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர், பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு பண்டங்களை சமைக்க இருக்கின்றனர்.

இத்துடன், ஹோட்டல் தொடங்குவதற்கான உரிமம் பெறுவது எப்படி, பதிவு செய்வது எப்படி என்ற விவரங்கள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவுத் திருவிழாவில் விளக்குகின்றனர்.
இது ஹோட்டல் தொடங்க வேண்டும், ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன எனத் தெரியாமல் இருக்கும் பலருக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்கிறது.

திண்டுக்கல் உணவுத் திருவிழாவை போல் சென்னை உணவுத் திருவிழாவிலும் பீஃப் பிரியாணி ஸ்டால்கள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்