தீவனங்கள் விலை உயர்வு: கால்நடை வளர்ப்பை கைவிடும் விவசாயிகள்!

Published On:

| By Minnambalam

தீவனங்கள் விலை உயர்வால் கால்நடை வளர்ப்பதை கைவிடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது..

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் கால்நடைகளால் கிடைக்கும் பால் விற்பனை மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம், வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் விற்பனை விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.

இந்த நிலை குறித்து பேசியுள்ள கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், “விவசாயத்துடன் கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் வருவாய் சற்று உதவிகரமாக இருந்தது. இந்த நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் விற்பனை விலை போதுமானதாக இல்லை. அரசு 4.3 சதவிகித கொழுப்பு சத்தும், 8.2 சதவிகித புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய்தான் கிடைக்கிறது.

கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்புச் செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை.

விளை பொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்துக்கு உதவியாக உள்ளது.தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியிலும் நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு, 45 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கால்நடை வளர்ப்பதை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை” என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

– ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel