மழைக்காலங்களில் பரவும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 22) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் ஃப்ளூ காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. ஃப்ளூ பரவல் காரணமாக மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக்கூடும்.
காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
இக்காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறவைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வண்டும். இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வரலாமல் தடுக்கலாம். மேலும் காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விபரங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் காய்ச்சல் பரவல் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
OPEN AI-க்கு திரும்பிய ஆல்ட்மேன்… ஐந்து நாளில் நடந்த அதிரடி திருப்பம்!
’நாக சைதன்யா 23’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!