வடகிழக்கு பருவமழை தீவிரத்தை அடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு கடந்த 3 நாட்களாக ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதுடன், தாமிரபரணி ஆற்றில் முழுவதுமாக திறந்துவிடப்படும் உபரி நீரால், கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
மேலும் தென்மாவட்டங்களில் தொடர்ந்து 3வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் நேற்று 54 செ.மீ மழை பெய்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 23.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தின் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று காலையில் மழையின் அளவு குறைந்துள்ள போதிலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 143 அடி கொள்ளளவுள்ள பாபநாசம் அணையில் தற்போது 82 அடி தண்ணீர் உள்ளது. 156 அடி கொள்ளளவுள்ள சேர்வலாறு அணையில் தற்போது 126 அடி தண்ணீர் உள்ளது. 118 அடி கொள்ளளவுள்ள மணிமுத்தாறு அணையில் 92 அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில், கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு மற்றும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் இரவு முழுவதும் மழை பெய்ததால், பல பகுதிகளில் மரங்கள் முறிந்து சரிந்தன.
நெல்லை மாநகர் வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு, கொக்கிரக்குளம், மீனாட்சிபுரம், பாரதி நகர், தச்சநல்லூர், குன்னத்தூர், பாப்பாக்குடி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு!
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை முதல் தற்போது வரை கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக, அங்குள்ள கைப்பிடிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. அனைத்து அருவிகளிலும் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் அங்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக, கருப்பாநதி, குண்டாறு மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவு நீர் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.
செங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சாவூர் குளம் உடைந்து கேரளாவிற்கு செல்லும் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வேறு பாதையில் போக்குவரத்து மாற்றப்பட்டு கேரளாவிற்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சங்கரன்கோவில், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், திருவேங்கடம், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், பனவடலிசத்திரம், நடுவக்குறிச்சி, இருமன்குளம், கரிவலம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.
சதுரகிரி மலைப்பாதை முழுவதும் வெள்ளநீர் செல்வதால் அங்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதி, தென்காசி ஆசாத் நகர், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாயும் பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், முக்காணி உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக கடலில் கலக்கும் முகத்துவார பகுதியான புன்னக்காயல் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது.
வெள்ளத்தால் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஸ்ரீவைகுண்டம் – திருச்செந்தூர், ஏரல்-திருச்செந்தூர் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இளையரசனேந்தல் சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியே வர முடியாமல் உள்ளன.
அதே போன்று அண்ணா பஸ் நிலையத்திற்குச் சென்ற அரசு பேருந்து மழைநீரில் சிக்கி வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளது.

திருச்செந்துர் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால், மாற்று பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதை 2 நாட்களுக்கு பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsAUS : 100வது டெஸ்ட்… கபா மைதானத்தில் வரலாறு படைப்பாரா கோலி?